பக்கம்:நித்திலவல்லி.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

339


நெருங்கி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. பொருளுக்கு உரிமையும் உடமையும் கொண்டாட வேண்டியவர்கள் அதன் மிக அருகே நெருக்கமாக வந்து விட்டார்கள் என்பது பொருள் நிச்சயம் மீட்கப்படும் என்று நம்புவதற்கு இடம் கொடுத்தது. ஒலைப் பேழையை மூடிப் பட்டுக் கயிற்றால் கட்டி, மீண்டும் அதனைப் பாறைப் பிளவில் மறைத்து வைத்து விட்டு அவர் திரும்பி நிமிர்ந்த போது முனையெதிர் மோகர் படையின் அந்த வீரன், கொற்கைப் பிள்ளையாண்டானோடு அங்கே உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்டார்.


20. பெருஞ்சித்திரன் பேசினான்

நீராடிப் புலர்த்திய கூந்தல் முதுகில் புரள, அந்தக் கூந்தலோடு தெரிந்த அவன் முகம் பெண் பிள்ளை ஆண் கோலம் புனைந்து வருவது போலிருந்தது. பெரியவரை வணங்குவதற்காகத் தரையில் நெடுஞ்சாண் கிடையாக அவன் விழுந்த போது கூட இயல்பாக வணங்குவதற்குக் கீழே கிடப்பது போல அமையாமல் நாணிக் கோணித் தடுக்கி விழுவது போல் அமைந்தது. வணங்குகிறவனை வாழ்த்த வேண்டுமே என்ற முறைக்காகப் பெரியவர் அவனை வாழ்த்தினார்.

“நீ பாண்டியகுல அரசுடைமைச் சின்னங்களாகிய நவநித்திலங்களை, இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறாய்! அதற்காக உனக்கு நன்றி சொல்ல வேண்டும்! உன் குடும்பத்து உடைமையை, அந்தக் குடும்பத்தில் ஒருவனாகிய நீயே கொண்டு வந்திருப்பதற்கு நான் நன்றி கூறுவது முறையில்லை என்றாலும், உன்னை ஒத்த பருவத்து விடலைப் பிள்ளைக்கு நன்றியும், பாராட்டும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் என்பதை உணர்ந்தே நான் இப்படிப் பாராட்டுகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/338&oldid=946555" இலிருந்து மீள்விக்கப்பட்டது