பக்கம்:நித்திலவல்லி.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


அந்தப் பிள்ளை விடலைத் தனம் நீங்கிப் பொறுப்புள்ளவனாக வளர்ந்திருக்கிறானா, இல்லையா என்பதை மிகமிகத் தந்திரமான முறையில் பரிசோதனை செய்ய விரும்பித்தான் அவர் இவ்வாறு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் சற்றே அதிகமான வார்த்தைகளைக் கொட்டி அவனுக்கு நன்றி கூறியிருந்தார். தகுதியற்றவனைத் தூற்றி வசை பாடித்தான் அவமானப்படுத்த வேண்டும் என்பதில்லை; அளவற்றுப் புகழ்வதன் மூலமாகவும் அவமானப்படுத்த முடியும். எதிரிகளை வசை பாடி அவமானப் படுத்துவது பாமரர்கள் காரியம். துதிபாடி அவமானப் படுத்துவது அரச தந்திரிகள் காரியம். கொற்கைப் பெருஞ்சித்திரன் மதுராபதி வித்தகருக்கு எதிரி இல்லை என்றாலும், பலவீனமான துணைவனாகவே இருந்தான். முதல் தரமான விரோதியை விடப் பலவீனமான நண்பன் கெடுதலானவன் என்று பெரியவருக்குத் தெரியும்.

தாம் அவனுக்கு நன்றி கூறி, அவன் நவநித்திலங்களைக் கொற்கையிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததைப் பாராட்டிய வஞ்சப் புகழ்ச்சியைப் புரிந்து கொண்டு உடனே அவன், “ஐயா, நீங்கள் இந்த எளியேனை நன்றி கூறிப் பாராட்டலாமா? நானும் என் மரபினரும் தங்களுக்கு அல்லவா, கல்பகோடி காலத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்பதாக உபசாரத்துக்காகவாவது சொல்கிறானா, இல்லையா என்று எதிர்பார்த்தே அவர் பேசியிருந்தார். அரச குடும்பத்துப் பிள்ளைக்கு இருக்க வேண்டிய தந்திரமும், உடனே அநுமானித்து முடிவெடுக்கும் இயல்பும், இந்தப் பிள்ளையிடம் சிறிதேனும் இருக்கிறதா, இல்லையா என்று முடிவாக அறியவே அவர் இதைச் செய்ய வேண்டியிருந்தது.

கொற்கைப் பெருஞ்சித்திரனோ, அவர் தன்னைப் புகழ்ந்து நன்றி சொல்லுவதை மெய்யாகவே வார்த்தைக்கு வார்த்தை பொருளுள்ளதாக எடுத்துக் கொண்டு மகிழ்ந்து முகம் மலர்ந்தான்.அதோடு அமையாமல், “ஐயா! வழி நடைக் களைப்பும் சோர்வும் எனக்குச் சொல்லி மாளாத அளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/339&oldid=946556" இலிருந்து மீள்விக்கப்பட்டது