பக்கம்:நித்திலவல்லி.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


உடனே தெரிய வேண்டும்! நான் கேட்கக் கேட்க நீ பதிலே சொல்லாமல் நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?”

இந்தக் குரலின் கனம் தன்னை அழுத்துவது போல் உணர்ந்தான் கொற்கைப் பிள்ளையாண்டான்.அவனுடைய நா பேச மேலெழாமல் ஒட்டிக் கொண்டாற் போல ஆகி விட்டது. துணிந்து பேசலாம் என்றாலோ நாக்குழறி விடுமோ என்றும் பயமாக இருந்தது. அவருடைய கண்கள் இரண்டும் இமையாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வார்த்தையாக மெல்ல அவன் பேசலானான்.

“குதிரைக் கப்பல் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன... ஆனால், அந்தக் குதிரைகளை எல்லாம் உடனேயே அங்கிருந்து இங்கே கோநகரத்துக்குக் கொண்டு... வந்து விட மாட்டார்கள். ஏறக்குறைய ஆறு திங்கள் காலமாவது அவற்றைப் பழக்கி வசப்படுத்திய பின்பே ஏறிப் பயணம் செய்யவோ, தேர்களில் பூட்டவோ, கடிவாளமிடவோ, அவை பயன்பட முடியும்.”

“போதும்! போதும்! பேச்சை நிறுத்து. எனக்கு நீ குதிரையின் விலங்கியல்புகளைப் பற்றிப் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கப்பல்கள் வந்தாயிற்றா, இல்லையா என்பதுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரியவேண்டும்.”

“அதுதான் வந்தாயிற்று என்று முதலிலேயே சொன்னேனே...?”

“குதிரைக் கோட்டத்து இளநாக நிகமத்தான்[1] பற்றி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் மறுமொழி கூறவேயில்லையே?”

“அவர் என்னிடம் மனம் விட்டு எதுவும் பேசுவதில்லை. நாளும், நேரமும் குறிப்பிட்டு நவ நித்திலங்களைக் கொண்டு வந்து சேர்க்குமாறு நீங்கள் செய்தியனுப்பிய பின் என்னைக் கூப்பிட்டுப் பல அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் செய்த பின் திருமோகூருக்கு அனுப்பி வைத்தார்.


  1. வணிகன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/341&oldid=946558" இலிருந்து மீள்விக்கப்பட்டது