பக்கம்:நித்திலவல்லி.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“அதிக எச்சரிக்கையோடு கவனித்துக் கொள் இந்தப் பிள்ளையாண்டானைப் போல் மன உறுதியற்றவர்கள் எதிரிகளிடம் சிக்கி விட்டால் அதைப் போன்று வினை வேறு இல்லை” என்று அவனிடம் பெருஞ்சித்திரனைப் பற்றி அழுத்தமாக எச்சரித்து அனுப்பி வைத்தார் அவர்.

அவர்கள் சென்றபின், அவர் சிந்தனையில் இளைய நம்பியையும், தென்னவன் மாறனையும், பெருஞ்சித்திரனையும் ஒப்பு நோக்கிய பல்வேறு எண்ணங்கள் எழுந்தன. இளையநம்பியை விட வலியவனும், மூத்தவனும் ஆகிய தென்னவன் மாறனின், முன் கோபமும், முரட்டுத் தனமும் கூட ஓரளவு குறைபாடுடைய அரச குணங்களாகவே அவருக்குத் தோன்றின. இணையற்ற அரசகுணம் என்பது பிறருடைய சிந்தனைக்கு உடனே பிடிபடாத பல தந்திரங்களைக் கொண்டது. அது இளையநம்பியிடமும் அதிகமாக வளர்ந்திருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் இளையநம்பியிடம் அவர் எதிர் பார்க்கும் அரச சுபாவங்களை உண்டாக்கி பக்குவப்படுத்துவதற்கான மூலக்கூறு இருப்பதாகத் தோன்றியது அவருக்கு.

இவர்களில் மூன்றாமவனாகிய பெருஞ்சித்திரனைப் பற்றி அவர் நினைக்கவே ஒன்றும் இல்லாமல் போயிற்று. அவர் சிந்தனை பாண்டிய நாட்டின் நாளைய தினங்களைப் பற்றியதாக இருந்தது. அதில் கவனம் செலுத்தும் கடமையும் அவருக்கு இருந்தது.

அந்த வேளையில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவருடைய ஆபத்துதவிகள் இருவரும் பரபரப்பாக அங்கே மூச்சு இரைக்க உள்ளே நுழைந்தனர். அவர்கள் வந்த நிலை மிக மிகப் பதற்றமானதாக இருக்கவே அவர் சலனமடைந்தார். ஏதோ புதிய அபாயம் நெருங்கியிருக்க வேண்டும் என்பது ஒன்று மட்டுமே அப்போது அவருக்குப் புரிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/343&oldid=946560" இலிருந்து மீள்விக்கப்பட்டது