பக்கம்:நித்திலவல்லி.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

347



உணர்ந்திருந்தாள். பெரியவர் திருமோகூரை விட்டு வெளியேறியிருப்பதும், பூத பயங்கரப் படையின் தொல்லைகள் பெருகியிருப்பதும் முறையாகவும், மிக விரைவாகவும் இளையநம்பிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்திருந்தும், மகள் ஏன் இப்படி அறவே அறியாதவள் போல், தன்னை அது பற்றி வினாவுகிறாள் என்பது புரிந்து நினைத்தாள் தாய். யாரிடமாவது உடனே திருக்கானப்பேர் இளைய நம்பியைப் பற்றிப் பேச வேண்டும் என்ற மகளின் ஆர்வத்தை இதிலிருந்து தாய் அறிந்து கொள்ள முடிந்தது. எதையோ மிகவும் திறமையாக ஒளிக்க முயல்கிறவளைப் போன்ற முயற்சியில், அதையே வேறொரு விதத்தில் தெளிவாகத் தெரியச் செய்து கொண்டிருக்கும் மகளின் நிலைமையைப் புரிந்து கொண்டாலும், அவள் மனம் அந்தப் பேதைமையில் நினைப்பதனால் அடைய முடிந்த மகிழ்ச்சியைத் தான் தடுக்கக் கூடாதென்று, மகளை விடப் பெரிய பேதையைப் போல் நடித்தாள் தாய். அந்த நடிப்பையும் அவள் மகளுக்காகவே செய்ய நேர்ந்தது.

“நீ நினைப்பது போல் ஆண் பிள்ளைகளும் அரச கருமத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், அவ்வளவு வெள்ளையாக நடந்து கொண்டு எதிரிகள் கையிலே சிக்கி விட மாட்டார்கள் பெண்ணே” என்று தாய் மகளுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்த வேளையிலேயே, மாளிகையின் முன் கூடத்தில் காராளரும், கொல்லனும் பேசும் குரல்கள் உட்புறம் கேட்கத் தொடங்கின. அப்போது ஏறக்குறையப் பொழுது புலர்கிற வேளை ஆகியிருந்தது. கூட்டத்திலிருந்து கேட்க முடிந்த பேச்சுக் குரல்களைக் கொண்டு உய்த்துணர்ந்து, கொல்லன் திரும்ப வந்திருக்க வேண்டும் என்பதைச் செல்வப் பூங்கோதையும் தாயும் புரிந்துகொண்டனர். உடனே மாளிகைக் கூடத்துக்கு ஒடிப் போய்க் கொல்லன் தந்தையாரிடம் என்ன கூறுகிறான் என்பதையும், தந்தையார் அவனிடம் எதை, எதை வினாவுகிறார் என்பதையும் ஒட்டுக் கேட்க ஆவலாயிருந்தது செல்வப் பூங்கோதைக்கு. ஆனால் நன்றாக விடியாத அந்த இருட்காலையில் அவசர, அவசரமாக எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/346&oldid=946563" இலிருந்து மீள்விக்கப்பட்டது