பக்கம்:நித்திலவல்லி.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


நல்லடையாளச் சொல்லை மாற்றி விட்டோம். இனி மேலும் அப்படி நமது நல்லடையாளம் வெளியானால், உடனே அதை நாம் அறிந்து மாற்ற முடியாமல் போனாலும் போய் விடலாம்... ஆகவே, தயை கூர்ந்து நீங்கள்...”

“என்னிடம் புதுமையாக இன்றுதான் பழகத் தொடங்குகிறவனைப் போல நீ ஏன் இவ்வளவு தயங்குகிறாய்?”

“தயக்கம் ஒன்றுமில்லை ஐயா! நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விடக் கூடாதே என்றுதான் அஞ்சுகிறேன். இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லைத் தங்கள் திருக்குமாரிக்குக் கூட அறிவிக்க வேண்டாம் என்பது என் கருத்து” என்று குரலைத் தணித்துக் கொண்டு அவரருகே வந்து நெருங்கி நின்று கூறினான் கொல்லன்.

அவன் கூறியதைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். பின்பு சில விநாடிகள் கழித்து, “நீ சொல்வது நியாயம்தான்! பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களுக்கு எதையும் எதிர்மறையாகவும், வேறு, வேறு கோணங்களிலும் நினைத்துப் பார்த்து முடிவு செய்யத் தெரியாது. எளிமையாகப் பிறரை நம்பி விடுவார்கள்” என்று அவரே அவன் கூறியதை ஒப்புக் கொள்வது போல் மறுமொழி கூறினார். தான் அவருடைய செல்வ மகளைப் பற்றிக் கூறிய கருத்து, அவர் மனத்தில் வேறுபாட்டையோ, ஆத்திரத்தையோ உண்டாக்கவில்லை என்பது அவனுக்கு மனநிறைவு அளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அடுத்த கணமே, அவர் பெரியவரின் இருப்பிடத்துக்குத் தம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தம்முடைய பழைய ஆவலையே, மீண்டும் வெளியிடத் தொடங்கி விட்டார். அரிய முயற்சி செய்து பல காரணங்களை எடுத்து விளக்கி, அந்த ஆவலைத் தற்காலிகமாகத் தவிர்க்கும்படி அவரை வேண்டிக் கொண்டான் கொல்லன். அவரும் விடுகிற வழியாயில்லை.

“அப்படியானால் மீண்டும் பெரியவரை நான் எப்போதுதான் பார்க்க முடியும் என்பதையாவது சொல்லேன். அவரைக் காணவும், அவருடைய உபதேசங்களைக் கேட்கவும் முடியாமல், என் நாட்கள் மலை போல் மெல்ல நகர்கின்றன."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/367&oldid=946584" இலிருந்து மீள்விக்கப்பட்டது