பக்கம்:நித்திலவல்லி.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


மூன்று பாண்டிய வம்சாவளியினரான இளையநம்பியையும் தென்னவன் மாறனையும், கொற்கைப் பெருஞ்சித்திரனையும், பாண்டியர் குலதனமாகிய நவ நித்திலங்களையும் வரவழைத்திருந்தார் அவர். இந்த ஒரே ஒரு குறிக்கோளை நிறைவேற்றி முடிப்பதற்காகத் தம்மை முழுத் துறவியாக ஆக்கிக் கொள்ளாமல் விருப்பு வெறுப்புகளோடு வாழ்ந்தார் அவர். இந்த இலட்சியம் நிறைவேறி விட்டால் மறு விநாடியே விருப்பு வெறுப்புகளற்ற முழுத் துறவியாய்க் காவியுடுத்தி உலக பந்தங்களிலிருந்து நீங்கியவராகக் கங்கை நீராடி, இமய மலைச்சாரலில் அவர் தவம் செய்யப் போய்விடலாம். கடுமையான நியமங்களை மேற்கொண்டிருந்தும் ஒரு துறவிக்குரிய அருள் உள்ளமும், உலக பந்தங்களில் இருந்து நீங்கிய இயல்பும் இல்லாமல் தாம் வாழ வேண்டி நேர்ந்திருப்பதை எண்ணி, எண்ணி அவர் உள்மனம் வருந்தாத கணமில்லை. இப்போதும் அதே ஆத்மார்த்தமான தவிப்பை அடைந்திருந்தார் அவர். உள்ளத்தில் சிந்தனைகள் ஓடின.

‘இன்னாருக்கு நான் மிகவும் வேண்டியவன். இன்னாருக்கு நான் மிகவும் வேண்டாதவன்’ என்றெல்லாம் வேண்டுதலையும், வேண்டாமையையும் கற்பித்துக் கொள்ளத் தொடங்கிய பின், அதில் துறவுக்கே இடமில்லை. துறவு என்பது விருப்பு, வெறுப்பையே துறக்கிற அளவு பந்தபாசமற்றதாக இருக்க வேண்டும்.ஒரு பெரிய அரச மரபை உருவாக்கி, மீண்டும் நாட்டை மீட்க நான் பொறுப்பு எடுத்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன், எனக்கும், செல்லூர் மாவலி முத்தரையனுக்கும், வெள்ளியம்பலமன்றில் நிகழ்ந்த ஒரு தர்க்கத்தில், பல தேசத்து அறிஞர்கள் முன்னிலையில், அவனைத் தோல்வியுறச் செய்தேன் நான். அந்தக் காலத்தில், இப்படி நான் தலை மறைவாகிற அளவு களப்பிரர்களின் கொடுமை இல்லை.

என்னால் தோற்கச் செய்யப்பட்ட வையை வடகரைச் செல்லூரான் மாவலி முத்தரையன் தாங்க முடியாத அறிவுப் பொறாமையினாலும், காழ்ப்பினாலும் என்னை எதிர்த்து வேரறுப்பதற்குக் களப்பிரர்களோடு உறவாடத் தொடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/371&oldid=946588" இலிருந்து மீள்விக்கப்பட்டது