பக்கம்:நித்திலவல்லி.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


காரனைப் பற்றி விசாரித்தீர்களாம். பாவம்! இனி அவனைப் பற்றியும், அந்த நன்றி கெட்ட கணிகை காம மஞ்சரியைப் பற்றியும் விசாரித்து ஆகப் போவது ஒன்றுமில்லை. இருவருமே இப்போது இந்த உலகில் இல்லாதவர்களாகி விட்டனர். இதோ பார்?” என்று இரத்தக்கறை படிந்து, நிணம் நாறும் புலித்தோல் அங்கியின் கிழிந்த பகுதிகளை அவர்கள் எல்லார் முன்பாகவும் எடுத்துக் காட்டினார். வயிறெறிந் தார்கள், குருதி கொதித்தது. அவர்களால் சகித்துக் கொள்ள முடியாத மரணத்தைப் பற்றி மிகவும் அலட்சியமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார் மாவலி முத்தரையர்.

அன்று அவர் சென்ற பின் சூழ்ந்த இருளுக்குப் பின் நெடுங் காலம் அந்தச் சிறையில் உள்ளவர்களுக்கு விடிவே பிறக்கவில்லை. தென்னவன் மாறன் என்ற வலிய இரும்பு மனிதனை ஒரு ஈயை நசுக்குவது போல் களப்பிரர்கள் நசுக்கிக் கொன்று விட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தென்னவன் மாறனோடு நெருங்கிப் பழகிய திருமோகூர் மல்லன் பல மாதங்கள் அந்த இருட்சிறையில் மெளனமாக மலை அமர்ந்து அழுவது போல் ஒரு மூலையில் அமர்ந்து கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தான். அழகன் பெருமாள் மனம் ஒடிந்து போனான். இடையிடையே அவர்களில் ஒருவனாவது, மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைப் பற்றி உளவு சொல்ல மாட்டானா என்ற ஆசையில் மாவலி முத்தரையர் அடிக்கடி வந்து பயமுறுத்திப் பார்த்துத் தோல்வியோடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் உயிரை இழக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே ஒழியத் தங்களுடைய மாபெரும் வழிகாட்டியின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கச் சித்தமாயில்லை. காலம் ஓடியது. கோடையும், மாரியும் மாறின. முன்பனியும், பின்பனியும் வந்து, வந்து போயின. ஏறக்குறைய அந்தச் சிறைக் கோட்டத்திலேயே தங்கள் வாழ்வு முடிந்து விடுமோ என்று அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால் நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களே ஒழிய, நம்பிக்கை அவர்களை இழக்கவில்லை என்பது நிரூபணமாகும் நாள் அவர்களையும் அறியாமலேயே விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/379&oldid=946596" இலிருந்து மீள்விக்கப்பட்டது