பக்கம்:நித்திலவல்லி.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கொண்டிருந்தான். ஆனால் மாவலி முத்தரையர் என்னவோ அதை அப்படியே ஒப்புக் கொண்டு முழுமையாக நம்பி விடவில்லை.

“கலியா! நீ எவ்வளவு சொன்னாலும் அந்த மதுராபதி வித்தகன் உயிரோடு இல்லை என்பது தெரிகிற வரை இதை நான் நம்பமாட்டேன், எதற்கும் விழிப்பாயிரு.” என்றுதான் மாவலி முத்தரையர் அடிக்கடி பிடிவாதமாக அவனை எச்சரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே மாவலி முத்தரையர் இருட் சிறையில் நலிந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் முதலியவர்களிடம் இருந்து நயமாகவும், பயமாகவும் மதுராபதி வித்தகரைப் பற்றி அறிய முயன்று கொண்டே இருந்தார். ஒரு நாள் அப்படி அவர் அறிய முயன்ற போது, அவர் செய்த சித்திரவதை பொறுக்க முடியாமல் அவரை வேண்டும் என்றே குழப்பி விட்டுக் கவனத்தைத் திசை திருப்பி ஏமாற்றக் கருதிய அழகன் பெருமாள்,

“ஐயா! உங்கள் சித்தரவதை பொறுக்காமல், இன்று நான் உள்ளதைச் சொல்லி விடுகிறேன்! நேற்று வரை மதுராபதி வித்தகர் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாதென்று உங்களிடம் கூறி வந்தேன். அது பொய்! பல மாதங்களுக்கு முன் அந்தப் பழைய அவிட்ட நாள் விழாவன்று, கோநகரைக் கைப்பற்ற முயன்று முடியாமற் போன ஏமாற்றத்தில் மதுராபதி வித்தகர் தென்னவன் சிறுமலைக் காட்டில் ஒரு பெரிய சிகரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார். அவர் அமரராகிப் பல மாதங்கள் ஆகி விட்டன. அவர் இறந்ததைக் களப்பிரர்கள் அறிந்தால் எங்கள் பாண்டியர் இயக்கத்தை அறவே ஒடுக்கி விடுவார்களோ என அஞ்சியே, அவர் இன்னும் உயிரோடு இருந்து வழி காட்டி வருவதாக நாங்கள் நடிக்க நேர்ந்தது!” என்று மாவலி முத்தரையரை நம்ப வைத்து விட ஏற்ற உருக்கமான குரலில் கூறினான். அவன் எதிர் பார்த்தபடி மாவலி முத்தரையர் அதை உடனே நம்பிவிடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/390&oldid=946607" இலிருந்து மீள்விக்கப்பட்டது