பக்கம்:நித்திலவல்லி.pdf/391

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

393



“அப்பனே! நீ என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது, மதுராபதியானை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். நீ சொல்வது போல் அவன் இறந்திருந்தால், பாண்டியர் இயக்கமும் அத்துடன் உயிரற்றுப் போயிருக்கும்... அப்படிப் போகாததாலும் வேறு பல சான்றுகளாலும் நீ கூறுவதை நான் நம்ப முடியாது...”

“நீங்கள் நம்புகிறீர்களோ, நம்பவில்லையோ, நடந்தது நடந்ததுதான்...” - என்று குரல் துக்கத்தால் குன்றிக் கண்களில் நீர் நெகிழ, அவர் முன் நடித்தான் அழகன் பெருமாள்.

அவனுடைய கண்ணீரும், குரலின் நெகிழ்ச்சியும் மாவலி முத்தரையரைக் குழப்பமடையச் செய்தன. ஒருவேளை உண்மையிலேயே மதுராபதி வித்தகர் மரணம் அடைந்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட அவருள்ளத்தில் மெல்ல எழுந்தது. ஆனால் எதிரே நிற்பவர்களால், தம் உணர்வுகள் கட்டுப்படுத்தப் படுகிற அளவு பலவீனப்பட்டு விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. அவர் விழிப்பாயிருந்தார். அழகன் பெருமாளே, முதலில் பெரியவர் மதுராபதி வித்தகரைப் பற்றி அப்படி ஒர் அமங்கலமான பொய்யைச் சொல்லத் தயங்கினான் என்றாலும், எதிரிகளின் கவனத்தைத் திசை திருப்பவும், பெரியவரின் பாதுகாப்புக்கும் அந்தப் பொய் மிக மிகப் பயன்படும் என்ற நம்பிக்கையே அவனைத் துணிய வைத்திருந்தது.

சிறையிலேயே, அப்போது உடனிருந்த காரி, கழற் சிங்கன், முதலிய நண்பர்களுக்குக் கூட அழகன் பெருமாள் கற்பனையில் சொல்லிய அந்தப் பொய் பிடிக்கவில்லை என்றாலும், அதில் ஏதேனும் தந்திர உபாயம் இருக்க வேண்டும் என்று கருதிக் கட்டுப்பட்டு, அவர்கள் மெளனமாக இருந்து விட்டனர். -

இந்தப் பொய்யின் மூலம் தன்னையும், தன்னுடன் இருக்கும் நண்பர்களையும் இருட்சிறையிட்டு அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/391&oldid=946608" இலிருந்து மீள்விக்கப்பட்டது