பக்கம்:நித்திலவல்லி.pdf/393

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

395


போன்ற பாண்டியர் இயக்கத்து இளைஞர்களிடம் நான் அத்தனை எளிதாக ஏமாறி விட மாட்டேன் என்பதை நீ மறந்து விடக் கூடாது! திடீரென்று எதையாவது சொல்லி, நம்ப வைத்து என்னையோ, என்னைச் சேர்ந்தவர்களையோ நீ கவிழ்த்து விட முடியாது. நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். நீங்கள் களப்பிரர்களிடம் ஆட்சியையும், நாட்டையும் இழந்திருப்பவர்கள். இழந்ததை மீட்கத் தவிப்பவர்களின் அறிவும், ஒற்றுமையும், வலிமையும், சாதுரியங்களும், எல்லாமே மிகமிகக் கூர்மையாக இருக்கும் என்பதை நான் அறிவேன் அப்பனே! முன்பு ஒருநாள் வினாவும் போது நீயே என்னிடமும், என் ஆட்களிடமும் ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன் யாரென்றே எனக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது'என்பது போல் நடித்திருக்கிறாய். இன்றோ இருந்தாற் போலிருந்து உள்ளுற ஏதோ சதித் திட்டம் செய்து கொண்டு பேசுவது போல ‘மதுராபதி வித்தகன் ஏமாற்றத்தால் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டதாகக்’ கதை அளக்கிறாய்!"

“இல்லை ஐயா! இதில் கதை எதுவும் கிடையாது. நான் இப்போது கூறுவதுதான் மெய்யாக நடந்த காரியம்! மதுராபதி வித்தகர் இப்போது இல்லை. நீங்கள் அவரைப் பற்றி நினைத்து வீணாகக் கவலைப் பட வேண்டாம்” என்று மீண்டும் உறுதியாகக் கூற முயன்றான் அழகன் பெருமாள். அவர் அதை நம்பாமலே மேலும் பேசினார்.

“நீ என்னை இத்தனை சுலபமாக ஏமாற்றி விட முடியாது அப்பனே! மதுராபதி வித்தகனை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒரு சிறிய முயற்சி. முதல் முறை தோற்றுப் போவதை ஏற்றுத் தாங்கிக் கொள்ள முடியாமல், மனம் உடைந்து மலை மேல் ஏறிக் குதித்து உயிர் விடுகிற கோழை அவனில்லை. விரக்தியையே விரக்தியடையச் செய்து தன்னை அணுக விடாமல் துரத்தும் வீரன் அவன். ஏமாற்றத்தையே ஏமாற்றம் அடையச் செய்து, தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/393&oldid=946610" இலிருந்து மீள்விக்கப்பட்டது