பக்கம்:நித்திலவல்லி.pdf/395

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

397



“இந்தப் பாண்டிய வேளாளர்கள் நம் வசம் சிறைப்பட்டிருக்கிற வரைதான் வெளியே அங்கங்கே இலைமறை காய் போல் ஒளிந்திருக்கின்ற வேறு சில பாண்டிய வேளாளர்கள் நமக்கு அஞ்சித் தயங்க முடியும். இவர்களையும் விட்டு விட்டால், மறுபடி பூசல்களை மூட்ட இவர்களே வெளியே போய்த் தூண்டினாலும் தூண்டலாம். ஆகவே, நான் சொல்கிற வரை இவர்களை நீ வெளியே விடவே கூடாது” என்று அரசனைக் கடுமையாக எச்சரித்து விட்டார் மாவலி முத்தரையர். கலியரசனும் இந்தச் சிறிய விஷயத்தில் அவரைத் தட்டிப் பேச விரும்பாமல் அவர் சொல்கிறபடியே கேட்டு விட்டான்...

அதே நேரத்தில் இருட்சிறையில் “பெரியவர் இறந்து விட்டதாக உன் வாயால் நீ ஏன் அமங்கலமாக ஒரு சொல் சொல்ல வேண்டும்?” என்று தன்னைக் கோபத்தோடு வினாவிய மற்ற நண்பர்களுக்கு, அழகன் பெருமாள் ஆத்திரப் படாமல் நிதானமாக மறுமொழி கூறினான்:

“நண்பர்களே? நான் இப்படி ஒரு பொய்யைக் கூறி மாவலியாரைத் திசை திருப்பி நினைக்க விட்டிருப்பதால் நமக்குப் பொன்னான வாய்ப்புகள் பல நேரும். போகப் போக நீங்களே அவற்றை அறிவீர்கள் . இப்போது உங்களுக்கு அது புரியாதுதான். நான் கூறியதால் மட்டுமே, பெரியவர் இல்லையாகி விட மாட்டார். அவர் இல்லை என்பதை அந்த மாவலியாரே நம்பவில்லை; பார்த்தீர்களா? ஆனால் இந்தக் குழப்பத்தினை நான் உண்டாக்கி விட்டிருப்பது நம் பெரியவருக்கே நல்லது. இனி இவர்கள், அவர் தலையைத் தேடி அலையும் முயற்சிகள் தானாகக் குறையும். அதனால் அவருக்கு அதிகப் பயன் விளைந்து, மற்ற திட்டங்களை அவர் நினைத்தபடி நிறைவேற்றுவார். பார்த்துக் கொண்டே இருங்கள்! எல்லாம் நமக்குச் சாதகமாகத் திரும்பப் போகிறது” என்று அழகன் பெருமாள் கூறிய பின்பே இது விஷயத்தில் நண்பர்களின் ஐயப்பாடுகள் தீர்ந்தன. ஒரு தந்திரத்திற்காகத் தான் கூறியுள்ள இந்தப் பொய்யை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/395&oldid=946612" இலிருந்து மீள்விக்கப்பட்டது