பக்கம்:நித்திலவல்லி.pdf/402

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



“தயை செய்து என்னோடு வரலாம் அல்லவா? இது கட்டளை அல்ல. அழைப்புத்தான். நீங்கள் கட்டளையை மறுக்கலாம். அழைப்பை மறுக்கக் கூடாது.”

“மறுக்காமல் வருகிறேன் இரத்தினமாலை! ஆனால், ஒரு நிபந்தனை. நீ தெளிவாக எல்லாவற்றையும் வார்த்தைகளால் பேச வேண்டும். மறுபடியும் புன்னகையால் பேச முயலுவாயானால், நான் நிச்சயமாக வருவதற்கில்லை.”

“ஏன்? என் புன்னகை உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?”

“புன்னகை பிடிக்காமல் என்ன? புன்னகையையும் புன்னகை செய்பவளையும் சேர்ந்தே பிடிக்கிறது... ஆனால், புன்னகையைக் கருவியாகக் கொண்டு பேச்சை மறைப்பதுதான் பிடிக்கவில்லை” என்று கூறி நகைத்தபடியே, அவளோடு எழுந்து புறப்பட்டான் இளைய நம்பி. அவள் மாளிகையின் பின்புறம், தோட்டம் இருந்த பகுதிக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அங்கே கூரைச்சார்பு வேய்ந்த கூடாரங்களில் கறவைப் பசுக்கள் கழுத்து மணி ஆடி ஒலிக்கப் புல் தின்று கொண்டிருந்தன. பசுக்களின் கொட்டாரத்தை அடுத்த பெரிய கூரைக் கொட்டாரத்தில், நீளமும் பருமனுமாக நூற்றுக் கணக்கான விறகுக் கட்டுகள் வரிசை குலையாமல் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. மழையில் நனைந்து விடாமல் அவை மிகமிகப் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்து இளைய நம்பி கேட்கலானான்:

“மழைக் காலத்தில் பயன்படட்டும் என்று கட்டுக் கட்டாக விறகு வாங்கி அடுக்கியிருக்கிறாய் இரத்தினமாலை! கடந்த சில நாட்களாக வாயிற் பக்கமாகவும், புறங்கடைப் பக்கமாகவும், பணியாட்கள் விறகுக் கட்டுகளைக் கொண்டு வந்து அடுக்கிய வண்ணமாயிருக்கிறார்கள். இவ்வளவு விறகிலும், உணவு சமைக்கத் தகுந்த அவ்வளவு பெரிய எண்ணிக்கையில், இனி உன் மாளிகைக்கு விருந்தினர்களும் வருவார்கள் போலிருக்கிறது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/402&oldid=946620" இலிருந்து மீள்விக்கப்பட்டது