பக்கம்:நித்திலவல்லி.pdf/414

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர்தான் மென்மையான உணர்வுகளே நெகிழாத கருங் கல்லைப் போன்றவர் என்றால், தாங்களுமா அப்படி இருக்க வேண்டும்? அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய் விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்த வரை தங்கள் அன்பும், பிரியமும் கூட இப்படி வாடிப் புலர்ந்து போய் விடுமோ என்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லா விதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற் படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா! இங்கே இந்தக் காராளர் பெருமாளிகையில், தாங்கள் இடை விடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால், அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ, அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்’ என்பதாகக் கொல்லன் என்னிடம் சொல்லிய போது, கோநகரத்தில் உங்களை அப்படி அருகிருந்து பேணி உபசரிப்பவர்கள் யாரோ, அவர்கள் மேல் எனக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உடனே, நான் பொறுக்க முடியாத கோபத்தோடு, ‘இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே! இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பது போல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/414&oldid=946632" இலிருந்து மீள்விக்கப்பட்டது