பக்கம்:நித்திலவல்லி.pdf/426

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


பிறவி வரை எனக்காக நோன்பிருந்து கழித்து விடு இரத்தினமாலை! அடுத்த பிறவியில் நான் குழலூதும் கலைஞனாகவோ, யாழ்ப்பாணனாகவோ, ஒரு இன்னிசைக் கவிஞனாகவோ பிறக்கிறேன். அப்போது எந்த நியதிகளும் நம்மைத் தடுக்க முடியாது” என்று கூறிக் கொண்டே வருகையில் இளையநம்பியின் கண்களிலும் நீர் மல்கி விட்டது. உணர்ச்சிப் பெருக்கில் அவன் சொற்கள் தடைப் பட்டன. அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவளை ஆரத் தழுவி மகிழ்ந்தான் அவன். அவன் கண்ணீர் அவள் தலையில் சிந்தி நனைத்து, அவளை மறு பிறவிக்கு அங்கீகரித்துக் கொண்டது.

“ஐயா! நீங்கள் பாணனாகவோ, கலைஞனாகவோ திரும்பி வருவது உறுதியாயின், ஒரு பிறவி என்ன ஆயிரம் பிறவிகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்” என்று அவன் மார்பில் புதைத்த முகத்தை நிமிர்த்திக் கூறினாள் அவள். இந்தச் சொற்கள் இளையநம்பியை மெய் சிலிர்க்கச் செய்தன.

சிறிது நேரம் மன நெகிழ்ச்சியில், எதுவுமே பேச இயலாமல் வாய்ச் சொற்கள் பயனற்ற நிலையில், இளைய நம்பியும் இரத்தினமாலையும் இருந்தார்கள். மீண்டும் இரத்தினமாலைதான் முதலில் உரையாடலைத் தொடங்கினாள்:

“ஐயா! நீங்கள் அழகன் பெருமாளுடன் உப வனத்திலிருந்து நிலவறை வழியே இந்த மாளிகைக்கு வந்த முதல் தினம் என் மேல் கடுங் கோபத்தோடும் உதாசீனத்தோடும் இருந்தீர்கள்... அந்த உதாசீனமும், கோபமுமே என்னைப் படிப்படியாக உங்களுக்குத் தோற்கச் செய்தன...”

“முதலில் நான் மனம் வேறுபட்டு இருந்தது உண்மைதான் இரத்தினமாலை! ஆனால், உன் அன்பு மயமான உபசாரங்களும், தேனூர் மாந்திரீகன் இங்கே காயப்பட்டு வந்த போது நீ கருணையோடு அவனுக்குச் செய்த பணிவிடைகளும் என் மன வேறுபாட்டை மாற்றிவிட்டன. நீ என்னை மயக்கிவிட்டாய்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/426&oldid=946644" இலிருந்து மீள்விக்கப்பட்டது