பக்கம்:நித்திலவல்லி.pdf/430

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


ஊர் திரும்பவில்லை. பெரியவருடனேயே, திருமால் குன்றத்தில் தங்கி விட்டார் அவர். பெரியவருடன் சேர்ந்து செய்யப் பல பணிகள் அவருக்கு இருந்தன.

நீண்ட யாத்திரையை முள்ளின் மேற் கழிப்பது போல், கழித்துவிட்டுத் திரும்பியிருந்த செல்வப்பூங்கோதைக்கு இளைய நம்பியைப் பற்றி யாரிடமுமே பேச முடியாமல் ஒரே தவிப்பாயிருந்தது. கொல்லன் ஊரில் இல்லை என்று தெரிந்தது. ஊரிலும், சுற்றுப்புறங்களிலும் புதுமை தெரிந்தது. ஏதோ மிகப் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கும் அமைதி தென்பட்டது. எங்கும் பூத பயங்கரப் படைவீரர்களே காணப் படவில்லை. மக்கள் அங்கங்கே கூடுமிடங்களில் எல்லாம், வெளிப்படையாகவே களப்பிரர்களை எதிர்த்தும், தூற்றியும் பாண்டியர்களை ஆதரித்தும், வாழ்த்தியும் நிர்ப்பயமாக உரையாடத் தொடங்கினர். வடக்கேயும், தென்மேற்கேயும் போர்கள் நடப்பதால், உள்நாட்டில் களப்பிரர்கள், இருதலைக் கொள்ளி எறும்பு போல் இடையே அகப்பட்டு விட்ட நிலையில் நலிந்திருப்பதை, எங்கும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டார்கள். நாட்டு நிலைமை தெளிவாகப் புரியும்படி இருந்தது.

இந்நிலையில் ஒரு பிற்பகலில் வெளியே மழை பெய்து கொண்டிருந்த போது தாயும் செல்வப் பூங்கோதையும் மாளிகைக் கூடத்தில் அம்மானை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மானை ஆடும் வேளையில் மகளின் மனப் போக்கை அறிந்த தாய், விளையாட்டின் போது பாடும் பாடலில் தானே சுயமாக இரண்டு மூன்று அடிகளை இட்டுக்கட்டி இயற்றி,

‘கலிகொண்ட களப்பிரனைக் கொன்ற புகழ்
மலிகொண்டு திருக்கானம் மகிழ்நம்பி
வலிகொண்டு வென்றானென் றம்மானை’

என்பது போலப் பாடிவிட்டு மகள் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். தாய் எண்ணியது போலவே, அந்தப் பாடல் பகுதி மகளின் கவனத்தைக் கவர்ந்தது. அவள் உடனே அம்மானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/430&oldid=946648" இலிருந்து மீள்விக்கப்பட்டது