பக்கம்:நித்திலவல்லி.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43


“இருக்கலாம்! ஆனால் இந்தத் திருக்கானப்பேர் வீரருடைய பேச்சு சாதுரியத்தால்தான் நேற்று இவர் போக வேண்டிய இடத்துக்கு என்னிடம் இவருடைய வழியையே தெரிந்து கொள்ள முடிந்தது என்பதை இவருக்கு நினைவூட்டுங்கள் அப்பா!”

இதைக் கேட்டு அவன் சிரித்தே விட்டான். அவனது கடுமையைத் தன் சொற்களால் உடைத்தெறிந்திருந்தாள் அவள். வேறு விதமாக அவளை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

“திருமோகூர்க் கொற்றவை கோவிலுக்கு ஒரு மண்டலம் நெய்விளக்கு, நான் மாடக் கூடலில் இருக்கும் இருந்த வளமுடைய பெருமாளுக்கும், அந்தரவானத்து எம்பெருமானுக்கும் அவிட்டத் திருநாளில் ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்கள், வேண்டுதல்கள் இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதா என்பதைத் தயை கூர்ந்து உங்கள் திருக்குமாரியிடம் சற்றே கேட்டுச் சொல்ல முடியுமா காராளரே?”

“திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் தவப் பெயரர் பத்திரமாக நான்மாடக் கூடல் நகரை அடைந்து காரியங்களை வெற்றி பெற முடித்துக் கொண்டு சுகமாகத் திரும்ப வேண்டும் என்ற புதுப் பிரார்த்தனையையும் இப்போது சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள் அப்பா...”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நேருக்கு நேராகவே அந்த முழுமதி முகத்தை ஏறிட்டுப் பார்த்து நன்றியோடு முகம் மலர்ந்தான் இளையநம்பி. அந்தப் பார்வையைத் தாங்க முடியாத நாணத்தோடு காலணிகளின் ஒலியை மட்டும் அவன் செவிகளுக்கு இசையாய் வழங்கி விட்டு அவள் உள்ளே ஓடிவிட்டாள். முதல் நாள் தன்னோடு கொற்றவை கோவிலுக்குச் செல்லும் வழியில் எல்லாம் சுபாவமாய்ப் பேசி வந்த அவள் இப்போது புதிதாய் நாணப்படுவது அவனுக்கு வியப்பை அளித்தது. பழகப் பழக நாணப்படுவதும், புரியப் புரிய வெட்கப்படுவதும், நெருங்க நெருங்க விலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/44&oldid=715144" இலிருந்து மீள்விக்கப்பட்டது