பக்கம்:நித்திலவல்லி.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கொன்று விட்டார்கள். தென்னவன் மாறன் கழுவேற்றப்பட்ட தினத்தன்று, அவன் உனக்குத் தமையன் முறை ஆக வேண்டும் என்ற உண்மையை உன்னிடம் தெரிவித்து விட்டதாக இரத்தினமாலை எனக்கு அறிவித்திருந்தாள். அந்தத் தென்னவன் மாறனைத் தவிர, எஞ்சியிருக்கும் மற்றொருவன்தான் இப்போது காராளரோடு உன்னைக் காண வந்திருக்கிறான். இவன் பெயர் பெருஞ்சித்திரன். இதுவரை இவன் மாறோக வளநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கையில் குதிரை கொட்டாரத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானின் பொறுப்பில் வளர்ந்தவன். பாண்டியர் குலநிதியாகிய நவநித்திலங்களோடு, சில திங்களுக்கு முன்புதான் இவன் என்னைக் காண வந்தான். இதற்கு மேல் குறிப்பறியும் திறனுள்ள உனக்கு நான் எதையும் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. வீரமோ, திடசித்தமோ, ஆண்மையோ அதிகம் இல்லாத இந்தப் பிள்ளையாண்டான் உனக்குத் தம்பி முறை ஆக வேண்டும். ஒரு தம்பியைத் தமையன் எப்படி வரவேற்க வேண்டுமோ, அப்படி முறையாக நீ இவனை வரவேற்கவும், ஏற்றுக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறாய். எனினும் மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்துக் கொடுக்கும் எந்தத் திறனையும், நீ இவனிடம் எதிர் பார்க்க முடியாது. பிறவற்றைக் காராளர் உன்னிடம் விவரிப்பார். இனி இந்த ஓலையின் தொடக்கத்தில் நான் உனக்கு இடப் போவதாகக் கூறிய கட்டளைகள் வருமாறு:

வெள்ளியம்பலத்திலும், அகநகரின் பிறபகுதிகளிலும், நம்மவர்கள் நிறைய ஊடுருவி இருக்கிறபடியால், நாளை மாலை மயங்குகிற வேளையில், அவர்களைக் கொண்டு புறத் தாக்குதலைத் தொடங்க வேண்டும். இந்தப் புறத் தாக்குதலுக்கு நீ தலைமை தாங்கிப் படை நடத்திச் செல்லக் கூடாது. களப்பிரர்கள் அகநகரில் இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். பார்வைக்கு ந்ன்றாகத் தெரிந்தாலும், ஒரு மணல் கோட்டை எப்படித் தொட்டால் உடனே சரிந்து விழுந்து விடுமோ, அப்படித்தான் களப்பிரர்களின் கோட்டையும் இப்போது இருக்கிறது. படை வீரர்கள் எல்லாரும் எல்லைகளில் போரிட்டுக் கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/444&oldid=946665" இலிருந்து மீள்விக்கப்பட்டது