பக்கம்:நித்திலவல்லி.pdf/454

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



எத்தாலும் நின்னை
மறப்பறியேன் என்பதனை
வித்தும் முளையும்போற்
கலந்திணைந்த விருப்பத்தால்
சற்றேனும் நினைத்திருந்தால்
தவிர்ந்திடுவாய் சீற்றமெலாம்'’

இப்போது சொல் செல்வப்பூங்கோதை! ஒவ்வோர் அழகிய பேதைப் பெண்ணும் தன்னை நினைத்துத் தவிக்கும் யாரோ ஓர் ஆண் மகனைக் கவிஞனாக்கி விட்டு, அவன் கவிஞனாகியதற்குக் காரணமே தான் என்பதை மறந்து திரிகிறாள் என்பது எவ்வளவு நியாயமான வாதம்? நீயும் அப்படி மறந்து திரிகிறாய் என்று நான் உன்மேற் குற்றம் சுமத்த முயன்றால், அது எவ்வளவிற்குப் பொருந்துமோ, அவ்வளவிற்கே நீ நான் உன்னை மறந்து விட்டதாக என் மேற்சுமத்தும் குற்றமும் பொருந்தும். நான் உன்னை விடக் கருணை உள்ளவன் பெண்ணே! நீ சிறிதும் இங்கிதமில்லாமல், என்னைக் ‘கடுங் கோன்’ என்று சபித்தாய்.நானோ உன்னை அழகிய சிறப்புப் பெயர்த் தொடராகத் தேர்ந்து ‘நித்தில வல்லி’ என அழைத்திருக்கிறேன். யாருடைய காதற் பெருந்தன்மை அதிகம், யார் மறக்கவில்லை என்பதற்கெல்லாம் இவையே சாட்சி."

என்று அந்த ஓலையை முடித்திருந்தான் இளையநம்பி. இந்த ஓலையைப் படித்து முடித்ததும், மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தாள் செல்வப் பூங்கோதை. அவ்வளவு நாட்களாக இளையநம்பியைப் பிரிந்தும், காணாமலும் இருந்ததால் ஏற்பட்ட தாபம் எல்லாம் இந்த ஒரே ஒரு கணத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது போலிருந்தது. அந்த ஓலையைத் திரும்பப் படித்து மகிழ்ந்தாள் அவள். நீற்றறையின் வெம்மையில் வாடியவன், நீரில் மீண்டும் மீண்டும் மூழ்கி எழுவதை ஒத்திருந்தது அவள் செய்கை. தாபம், தவிப்பு என்ற நீற்றறையில் பல நாட்களாகப் புழுங்கிய அவள் மேல் தண்ணென்று அன்பு மழையே பெய்தது போல் வந்திருந்தது அந்த ஓலை. ஓலையைக் கொடுத்ததுமே கொல்லன் விரைந்து திரும்பிப் போய்விட்டானே என்றெண்ணி இப்போது வருந்தினாள் அவள். ‘அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/454&oldid=946683" இலிருந்து மீள்விக்கப்பட்டது