பக்கம்:நித்திலவல்லி.pdf/459

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

461


ஒடுங்கி உறைந்து போயிருப்பது போல் ஒரு சூனிய அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இவ்வளவு இரகசியமான இத்தனை குறைவான எண்ணிக்கையுள்ள ஆபத்துதவிகளுடன், எதற்காகத் திடீரென்று இவர் திருமோகூருக்கு மீண்டும் வந்திருக்கிறார் என்று சிந்திக்கவும், அநுமானிக்கவும் முயன்று தோற்றது அவள் மனம்.

வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் துணிந்து ஒவ்வோர் அடியாகப் பெயர்த்து வைத்து உள்ளே சென்றாள் அவள். கணிரென்ற அந்தக் குரல் அவளை வரவேற்றது.

“வா, அம்மா! நீயும் உன் அன்னையும் மற்றவர்களும் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?”

முன்னை விடத் தேசு நிறைந்து சுடர் விரிக்கும் அந்தத் தோற்றத்தையும், முகத்திலிருந்து ஊடுருவும் ஒளி நிறைந்த கண்களையும், பார்த்துக் கூசிய அவள் ஒரிரு கணங்கள் மறு மொழி கூற வார்த்தைகளே இன்றி திகைத்தாற் போல் அப்படியே நின்று விட்டாள். செம்பொன் நிறமுடையதும், மிகப் பெரியதுமான மகா மேரு மலையைத் திடீரென்று மிக அருகில் கண்டு துவண்ட ஒரு சிறிய மாதவிக் கொடி போல், தளர்ந்து திகைத்திருந்தாள் செல்வப் பூங்கோதை. மீண்டும் அவர் குரலே ஒலித்தது:-

“உன்னைத்தானே கேட்கிறேனம்மா? ஏன் பதில் சொல்லாமல் நின்று விட்டாய்?”

“தங்கள் திருவருளால், இதுவரை நலத்துக்கு ஒரு குறைவும் இல்லை, ஐயா!”

மீண்டும் இமையாமல் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு, அவர் கூறினார்:

“இன்று நீ மிகவும் ம்கிழ்ச்சியாயிருப்பதாகத் தெரிகிறது செல்வப்பூங்கோதை”

“தங்களை ஒத்த பெரியோர்களைக் கண்டு வணங்கும் பேறு கிடைத்தால், இந்தப் பேதை அதற்காக அடையாத மகிழ்ச்சியை வேறு எதற்காக அடைய முடியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/459&oldid=946688" இலிருந்து மீள்விக்கப்பட்டது