பக்கம்:நித்திலவல்லி.pdf/460

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



“இன்று உன் பேச்சுக் கூட மிகவும் சாதுரியமாக இருக்கிறது. ஆயினும் இது என்னைக் காண்பதற்கும் முன்பாகவே உனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது பெண்ணே...”

இந்தச் சொற்களைக் கேட்டு நடுங்கிய நடுக்கத்தில், தன் இடைக் கச்சினுள் மறைக்கப்பட்டிருந்த இளையநம்பியின் ஓலையே மெல்ல நழுவி, அவர் முன்பாகக் கீழே விழுந்து விடுமோ என்று அஞ்சினாள் செல்வப்பூங்கோதை. இந்த வினாவிற்குப் பின், எதிரே அமர்ந்திருந்த அந்தக் கம்பீரமான வடிவம் மிகப் பெரிய சிகரமாய் உயர்வது போலவும், தான் அந்தச் சிகரத்தின் முன்னே பெருங்காற்றில் ஆடும் ஒரு சிறு தளிர்க் கொடி போல் தளர்வதாகவும் உணர்ந்தாள் அவள். பயத்தில் அவளுடைய உடல் பதறியது. பேச்சை வேறு திசைக்கு மாற்ற முயன்று,

“ஐயா தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பித் திருமோகூர் வந்ததுமே, என் தந்தை இங்கிருந்து வெளியேறியவர்தான்; இன்னும் அவர் திரும்பி வரவில்லையே?” என்றாள்.

“அவர் வேறெங்கும் போய் விடவில்லை, செல்வப்பூங்கோதை என்னிடம்தான் வந்திருந்தார். இப்போதும் என் காரியமாகத்தான் போயிருக்கிறார். தீர்த்த யாத்திரை முடிந்ததும் நான்தான் அவரை என்னிடம் உடனே வரச் சொல்லியிருந்தேன்" என்று அதற்கு அவரிடமிருந்து மறுமொழி வந்தது; தன்னையும் தன் உள்ளுணர்வுகளையும் அவர் காண விடாமல் விலக்கும் நோக்கத்தோடு, வேறு பேச்சுகளை வளர்க்க விரும்பிய அவள், 'இவ்வளவு காலமாகத் தாங்கள் எங்கே சென்றிருந்தீர்கள் ஐயா?' என்று கேட்க எண்ணினாள்; ஆனால் அப்படி எண்ணிய மறு கணமே அந்தக் கேள்வி தன் நிலைமையை மீறியது என்னும் பயத்துடன், அவ்வாறு அவரை வினாவும் எண்ணத்தை உடனே விரைந்து தவிர்த்தாள்.

‘இவ்வளவு காலமாகத் திருமோகூர் எல்லையில் தங்களைக் கண்டு வணங்கும் பேறு எங்களுக்குக் கிட்ட வில்லையே; ஏன்?’ என்று வேண்டுமானால் பணிவாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/460&oldid=946689" இலிருந்து மீள்விக்கப்பட்டது