பக்கம்:நித்திலவல்லி.pdf/461

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

463



அதே கேள்வியை வேறு விதமாக மாற்றிக் கேட்கலாமே தவிர, முதலில் நினைத்தபடி, 'எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு காலம்?’ என்பது போல் அவரைக் கேட்கவே கூடாது என்று தன் நாவை அடக்கிக் கொண்டு விட்டாள் அவள். வாளின் நுனியில் நடப்பது போல் மிக,மிக எச்சரிக்கை உணர்வோடு அவள் அவர் முன்பு நிற்க வேண்டியிருந்தது.

அவள் இவ்வாறு சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே, அவர் காலடியிலும் அருகிலும் இருந்த புற்றுகளில் இருந்து, நாகப் பாம்புகள் சீறியபடி, செக்கச் செவேரென்று பிளந்த நாவோடு வெளிப்பட்டு, உடலின் மேலேறின. படமெடுத்தன; அவரோ அசையாமல், அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

கழுத்திலும், தோளிலும், காலிலும் கொடிய நாக சர்ப்பங்களோடு முன்பும் சில சந்தர்ப்பங்களில், இப்படிக் கோலத்தில் அவள் அவரைக் கண்டு பயந்திருக்கிறாள். இன்றும் கூட, அந்தப் பயத்தையும், நடுக்கத்தையும் அவளால் தன்னிடமிருந்து தவிர்க்க முடியவில்லை. பயமும், திகைப்பும் மாறி, மாறித் தெரியும் விழிகளோடு அவள் அவர் எதிரே மருண்டு நின்று கொண்டிருந்தாள். அந்த நிலையில் அவரே சிறிது நேரத்திற்குப் பின் மெல்ல மீண்டும் அவளை வினாவத் தொடங்கினார்:-

“இன்று மாலையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சியோடு இருப்பதை நான் குறுக்கிட்டுப் பாழாக்கி விட்டேனே என்று உனக்கு என் மேல் கோபம் வருகிறதல்லவா?”

“அப்படி ஒரு போதும் இல்லை ஐயா! தாங்கள் என் போன்ற பேதைகளின் கோபத்துக்கு அப்பாற்பட்டவர்! இன்னும் சொன்னால், என்னை ஒத்த பேதைகளைக் கோபித்துக் கொள்வதற்கும், கடிந்து கொள்வதற்கும் உரியவர்...”

“நீ சொல்வது போல் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் நானும் இங்கு இன்று வந்தேன். உன்னைக் கூப்பிட்டனுப்பினேன். நீயும் என் அழைப்புக்கிணங்கி வந்திருக்கிறாய்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/461&oldid=946690" இலிருந்து மீள்விக்கப்பட்டது