பக்கம்:நித்திலவல்லி.pdf/462

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



நேராக எதைச் சொல்ல முடியாததனால், இதையெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர் சொல்லியதிலிருந்து, சொல்ல விரும்புவதைப் புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் செல்வப் பூங்கோதை. அதிகாரமோ, ஆணையோ, சினமோ, சீற்றமோ சிறிதுமின்றி அவர் எல்லையற்ற நிதானத்தோடும், எல்லையற்ற பொறுமையோடும் இன்று தன்னிடம் பேசியதே அவளுக்குச் சந்தேகத்தையும், பயத்தையும் உண்டாக்கிற்று. இந்த அடக்கம் இயல்பானதில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது. இந்த நிதானமும், ஐயப்பாட்டிற்கு உரியதாகவே அவளுக்குத் தோன்றியது. 'தந்தையாரை இவரே வேறு காரியமாக எங்கோ அனுப்பியிருக்கிறார். தாயை உடன் அழைத்து வரவேண்டாம் என்று முன்கூட்டியே இவர் எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார். என்னை மட்டும் தனியே அழைத்து இப்படிப் பேசுவதற்கு அது என்னதான் அவ்வளவு பெரிய அந்தரங்கமாக இருக்கும்' என்று அவள் மனம் ஒவ்வொரு கணமும் நினைத்துத் தயங்கிக் கொண்டேதான் இருந்தது. அந்தத் தயக்கத்தோடுதான் அவள் அவர் முன்பாக அப்போது நின்று கொண்டிருந்தாள்.

“செல்வப்பூங்கோதை முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மாலை தோறும் எனக்கு நீ கொண்டு வந்து அளித்த தேனும், தினைமாவும் எவ்வளவு சுவையாக இருந்தன தெரியுமா?” என்று சிறிது நேர மெளனத்திற்குப் பின், பழைய நாட்களில் எப்போதோ அவள் செய்த உபசாரம் ஒன்றை இருந்தாற் போலிருந்து நினைவு கூர்ந்து பேசினார், அவர். இப்படி அவர் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தித் தன் மனத்தை மெல்ல மெல்ல இளகச் செய்வது அவளுக்கே புரிந்தாலும், அவருடைய பேச்சில் இசைந்து வணங்கி வசப்படுவதைத் தவிர்க்க ஆற்றலின்றி இருந்தாள். மிகவும் பணிவாக அவளே அவரை வேண்டவும் செய்தாள்:-

“ஐயா! இப்போது கூடத் தாங்கள் கட்டளையிட்டால், நாளைக்கே தங்களுக்குத் தேனும், தினை மாவும் கொண்டு வந்து படைக்கின்ற பேறு இந்தப் பேதைக்குக் கிடைக்கும்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/462&oldid=946691" இலிருந்து மீள்விக்கப்பட்டது