பக்கம்:நித்திலவல்லி.pdf/464

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


என்று கூப்பிட்டனுப்பிய விரைவுக்கு ஏற்ப, எதையுமே பேசாமல், தனக்கு அவர் மிகவும் சுலபமாகவே விடை கொடுத்துத் திரும்பப் போகச் சொல்லியதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எதற்காகவோ, தன்னைச் சிறிது விட்டுப் பிடிக்க முயல்கிறார் போலும் என்றும் அவளுக்கே தோன்றியது. மாளிகை வரை ஆபத்துதவிகள் துணை வந்து அவளைத் திரும்பக் கொண்டு வந்து விட்டனர். இரவு முழுதுமே அவருடைய பரிவின் காரணத்தைப் பற்றிச் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயன்றாள் அவள்.


14. கொற்றவை சாட்சியாக...

திர்பாராத விதமாகத் தன்னை நோக்கிப் பெருகும் அந்தப் பரிவின் காரணம் அவளுடைய அநுமானத்திற்கும் எட்டாததாகவே இருந்தது. பெரியவர் திருமோகூருக்கு வந்திருப்பதையோ, தான் போய் அவரைச் சந்தித்ததையோ தாயிடம் கூட அவள் சொல்லவில்லை. இரவு நெடுநேரம் உறக்கமின்றி, அவள் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த போதும், “பெண்ணே அந்தி மயங்குகிற வேளையில் புறப்பட்டுப் போய்க் கொற்றவைக் கோவிலில் இப்படி உறங்காமலிருக்க வரம் பெறுவதற்காகத்தான் அவ்வளவு நாழிகை காத்திருந்து வேண்டி வந்தாயா!” என்றுதான் தாயே அவளைக் கடிந்து கொண்டாள். தான் கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகச் சொல்லி விட்டுப் பெரியவர் அனுப்பியிருந்த ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றதைப் பற்றித் தாய் ஐயுறவில்லை என்பதை, அவளுடைய சொற்களாலேயே விளங்கிக் கொண்டாள் செல்வப்பூங்கோதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/464&oldid=946693" இலிருந்து மீள்விக்கப்பட்டது