பக்கம்:நித்திலவல்லி.pdf/467

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

469



“எனக்கு இது போதும் அம்மா! மற்றவற்றை எல்லாம் அப்படியே, அதோ அவர்களிடம் பாத்திரத்தோடு கொடுத்து விடு...” என்று கூறித் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவிகளைச் சுட்டிக் காட்டினார். அவளும் அப்படியே செய்தாள்.

‘தேனும் தினை மாவும் கொண்டு வா’ என்று முதல் நாளிரவு அவர் தனக்குக் கட்டளையிட்டது தன் சிரத்தையையும், உபசரிக்கும் இயல்பையும் சோதிப்பதற்காகத்தான் என்பது இப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. தன்னைப் புரிந்து கொள்ள அது ஒரு பாவனை என்பதை அவள் விளங்கிக் கொண்டாள். உண்பதிலோ, ருசிகளிலோ அந்த மாபெரும் அரச தந்திரிக்கு அவ்வளவு அக்கறை இல்லை என்பது முன்பே அவளுக்குத் தெரிந்திருந்த உண்மை, இன்று மீண்டும் உறுதிப்பட்டது. கடந்த காலத்தில் பல நாட்களில் தந்தை சொல்லி, அவள் கனிகளும், தேனும், தினை மாவும் கொண்டு வந்து அவருக்குப் படைத்த போதுகளிலேயே அவரைப் புரிந்து கொண்டிருந்தாலும், நேற்று அவரே தினை மாவுக்காகவும், தேனுக்காகவும் தவிப்பது போல் ஆடிய சாதுரிய நாடகம் அவளையே ஏமாற்றியிருந்தது. அவர் ஏதோ பெரிய காரியத்திற்காகப் பேதையாகிய தன்னை ஆழம் பார்க்கிறார் என்பதை, அவள் தன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாள். அவர் உண்ணுகிற வரை பொறுத்திருந்த அவள், பதற்றமின்றி நிதானமாக அவருடைய இருப்பிடம் வரை சென்று கை கழுவவும், பருகவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை உபசரித்தாள். பின்பு அவரே என்ன சொல்லுகிறார் என்று எதிர் பார்த்துக் காத்திருப்பது போல் சிறிது நேரம் அவருடைய முகமண்டலத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணுடனும் கூடவே பிறந்துவிடும் பிறவி சாதுரியமும், பாதுகாப்பு உணர்வுமே அப்போது அவளுக்குத் துணை நின்றது. அவரோ அவள்தான் முதலில் கேட்கட்டுமே என்று விட்டுப் பிடிப்பது போன்ற மன நிலையில், தேனையும் தினை மாவையும் பற்றி மட்டும் நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லிவிட்டு வாளா இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/467&oldid=946696" இலிருந்து மீள்விக்கப்பட்டது