பக்கம்:நித்திலவல்லி.pdf/474

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



கொண்டுதான் இருந்தனர். முற்றுகை தொடங்கியதுமே நடந்தவற்றை இளைய நம்பிக்கு அறிவிக்க உடனே ஒரு பாண்டிய வீரன், கணிகை மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்தான். கணிகை மாளிகையின் நிலவறையில், பல நூறு வீரர்களோடு, இளையநம்பியும், காராளரும், கொல்லனும் ஆயுதபாணிகளாகப் போர்க் கோலம் பூண்டு காத்திருந்தனர். புறத்தாக்குதலைப் பற்றிய விளைவுகளை அறிந்து, நிலவறை வழியே, உட்கோட்டையில் அரண்மனைக்குள் ஊடுருவி, வெளியே மதிற்புறத்தை வளைத்துக் கொண்டிருக்கும் தங் களைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருப்பது, கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டு, அவர்களை உள்ளே ஏற்பது போன்ற செயல்களுக்கு ஆயத்தமாக இருந்தார்கள். இளையநம்பி முதலியவர்கள், முன்னணிப் படையோடு பெரியவர் மதுராபதி வித்தகர் ஓலை மூலம் இட்டிருந்த கட்டளைப்படியே பெருஞ்சித்திரனை அனுப்பி விட்டு, இப்படி ஆயத்தமாகக் காத்திருந்தவர்களுக்குப் பெருஞ்சித்திரன் வெள்ளியம்பலத்துக்கு முன்னால் நடந்த போரில் மாண்டு விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

“பெருவீரனான ஒரு தமையனையும் களப்பிரர்கள் கொன்று விட்டார்கள். பயந்த சுபாவமுள்ளவனான ஒரு தம்பியையும் இப்போது களப்பிரர்கள் கொன்றுவிட்டார்கள். நான் மட்டும் இந்த அரசைப் போரிட்டு வென்று, என்ன செய்யப் போகிறேன்?” என்று கண் கலங்கியபடி மனம் சோர்ந்து பேசினான் இளையநம்பி. காராளரும், கொல்லனும் எவ்வளவோ ஆறுதல் கூறிப் பார்த்தனர். சோர்வின்றி உடனே தாங்கள் உட்கோட்டையில் நுழைந்து, தாமதமின்றிக் கோட்டைக் கதவுகளைத் திறந்து, வெளியே மதிலை வளைத்துக் கொண்டிருப்பவர்களை உள்ளே ஏற்றுக் கொண்டு, வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்பதை அவர்கள் இளைய நம்பியிடம் எடுத்துக் கூறினார்கள்.

“ஐயா! தங்களைப் போல்தான் நீண்ட காலத்துக்கு முன் குருட்சேத்திரப் போர்க் களத்தில் மகாவீரனான அர்ச்சுனனும் சோர்ந்து நின்றான். அப்போது அவன் சோர்வைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/474&oldid=946703" இலிருந்து மீள்விக்கப்பட்டது