பக்கம்:நித்திலவல்லி.pdf/475

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

477


போக்குவதற்குக் கரியமேனிக் கடவுளாகிய கண்ணபிரானே, அறிவுரை கூற வேண்டியிருந்தது. தங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு நான் ஞானியில்லை. ஆயினும், அரச குலத்தோர் போர்க்களத்தில் சோர்ந்து நிற்பது, அறமாகாது என்பதை மட்டுமே கூற என்னால் முடியும்” என்றார் காராளர். அவருடைய சொற்களும், பாரதப் போரைச் சுட்டிக் காட்டி அவர் கூறிய போர் அறமும், இளையநம்பியின் தளர்ச்சியைப் போக்கி அவனை உறுதிப்படுத்தின. இரத்தினமாலையும் அவனுக்கு ஆறுதல் கூறினாள். அவளும், கணிகை மாளிகைப் பெண்களும், “வாகை சூட வேண்டும்” என்று வாழ்த்தொலி இசைத்து, வெற்றித் திலகமிட்டு, இளையநம்பிக்கு விடை கொடுத்தனர். நிலவறைப் படை விரைந்து புறப்பட்டது. காராளரும், கொல்லனும் உப வனத்துக் குறளனும் பின் தொடர இளையநம்பி படை நடத்திச் சென்றான். வெள்ளியம்பலத்தில் படை வெளியேறி, மீண்டும் நள்ளிரவில் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் நுழைந்தது. அங்கிருந்து குறளன் காட்டிய நிலவறை வழியே அரண்மனை உட்கோட்டையில் புகுந்தனர். அந்த வழியாக நேரே சென்றால், அழகன் பெருமாள் முதலியவர்கள் அடைக்கப்பட்டிருந்த பாதாளச் சிறைக் கூடம் இருந்த பகுதிக்குள் செல்ல முடியும் என்று குறளன் கூறினான். பெரியவர் கட்டளைப்படி முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டினார்கள் காராளரும், கொல்லனும். எல்லாமே திட்டமிட்டது போல் காலத்துடன் நிறைவேறின. உட்கோட்டையிலோ, சிறைகூடப் பகுதிகளிலோ இவர்களை எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. அங்கங்கே இருந்த களப்பிர வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பாண்டியர்களின் மதிற்புற முற்றுகையாகிய உழிஞைப் போரை எதிர்க்க நிறுத்தியிருந்தார்கள். கோட்டை மிக எளிதாக வீழ்ந்து விடும் என்று உள்ளே நுழைந்ததுமே இளையநம்பிக்குப் புரிந்தது. பெரியவரே தம் ஓலையில் ஒப்பிட்டுச் சொல்லியிருந்தது போல் அப்போதுள்ள நிலையில் அது வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/475&oldid=946704" இலிருந்து மீள்விக்கப்பட்டது