பக்கம்:நித்திலவல்லி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47


மில்லை. அடிமைப்படுத்துகிறவர்களோ தங்கள் பிடி தளர்ந்துவிட்டால் எதை எதை இழக்க நேரிடும் என்ற பயத்திலேயே செத்துக் கொண்டிருப்பவர்கள். பிறருடைய கால்களிலோ கைகளிலோ ஒரு தளையை இடுகின்ற பாவி தன் இதயத்தில் ஒர் ஆயிரம் தளைகளைச் சுமக்க நேரிடும். பாண்டிய நாட்டைப் பிடித்துப் பல ஆண்டுகள் ஆகியும் களப்பிரர்கள் நிலையும் அங்கு இப்படித்தான் இருந்தது. காலூன்ற முடியாத நிலையே தொடர்ந்து நீடித்தது.

ஒரு பெரிய தாமரைப் பூவின் இதழ்களைப்போல் அடுக்கடுக்காக அமைந்த தெருக்களையும், பூவின் நடுமையம் போன்ற அரண்மனையையும், நெருங்கிச் சூழ்ந்த பூந்தாதுகள் போன்ற மக்கள் கூட்டத்தையும், அந்தப் பூந்தாதுகளில் தேனுண்ண வரும் வண்டுகளைப்போல் பரிசில் நாடிவரும் புலவர்களையும் உடைய அழகிய மதுரை மாநகரம் அந்நியராட்சியில் தன் கலைகள் தன்னுடைய தனிப்பெரும் தமிழ்ச் சங்கம், தன்னுடைய கம்பீரம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும், அவற்றை எல்லாம் இழந்திருக்கிறோம் என்ற உணர்ச்சிக் குமுறல் மக்களிடையே நீறுபூத்த நெருப்பாக மறைந்திருந்தது. களப்பிரர்கள் சிறைப்பிடிக்க முடியாமற் போன ஒன்று இந்த உணர்ச்சிக் குமுறல்தான்.

மதுராபதி வித்தகர் போன்ற பாண்டிய குலத் தலைவர்கள் மறைந்திருந்தாலும் எங்கிருந்தோ காற்றாய் உலவி இந்த நெருப்பைக் கணிய வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூலநெருப்பு எங்கிருந்து கணிகிறது என்று அறியக் களப்பிரர்களால் முடியாமலிருந்தது. முடிந்தால் இந்த மூல நெருப்பைத் தடம் கண்டு சிறுபொறியும் எஞ்சிவிடாமல் அழிக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்க் கலைகளும், தமிழ் நாகரிகமும், தமிழர் பெரு விழாக்களும் சோதனைகளுக்கு ஆளாயின, என்றாலும் மக்களில் பெரும்பான்மையினருடைய ஆர்வத்துக்குக் களப்பிரர்களால் அணையிட்டுவிட முடிய வில்லை. ஆனால், கட்டுக் காவல்களும், பூத பயங்கரப் படையினரின் கெடுபிடிகளும் குறைவின்றி இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/48&oldid=714400" இலிருந்து மீள்விக்கப்பட்டது