பக்கம்:நித்திலவல்லி.pdf/487

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

489



“ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது! இந்த அரசே தாங்கள் மீட்டுத் தந்தது. இதில் தங்களுக்கில்லாத உரிமையா? தாங்கள் வேண்டும் வாக்குறுதிகள் எவையாயினும் சிரமேற் கொண்டு அவற்றை உடனே நிறைவேற்றுவது என் கடமையாகும்.”

“உன் பணிவைப் பாராட்டுகிறேன்; ஆனால் உன் பணிவையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்தி, முன் கேட்காத புதிய வாக்குறுதிகள் எதையும் இப்போது மீண்டும் நான் கேட்டு விட மாட்டேன், பயப்படாதே. சூரிய சந்திரர்கள் சாட்சியாக ஆலவாய் இறையனார் மேலும், இருந்த வளமுடைய பெருமாள் மேலும் ஆணையிட்டு எனக்கு இரு வாக்குறுதிகள் நீ அளித்திருக்கிறாய். என் சார்பில் போரில் உதவுவதற்கு நிபந்தனையாகச் சேர மன்னனுக்கு ஒரு வாக்குறுதியும் தனியே அளித்திருக்கிறாய்..”

“ஆம், ஐயா! நன்றாக நினைவிருக்கிறது. அந்த வாக்குறுதிகள் என்னவென்று கூறினால், இப்போதே அவற்றை நான் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.”

அவர் இதற்கு மறுமொழி கூறத் தயங்கி, அவனை நோக்கி மெல்லப் புன்னகை பூத்தார். பின்பு கூறலானார்.

“என் வாக்குறுதிகள் இரண்டும் சுலபமானவை. பாண்டிய நாட்டின் நீண்ட கால நலனை மனத்திற் கொண்டவை. அவற்றை நீ உடனே ஏற்றுக் கொண்டு விட முடியும். ஆனால்... சேரனுக்காக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி மட்டும் சற்றே சிரமமானது...?”

“சிரமமானது என்று எதுவுமே இருக்க முடியாது ஐயா! போரில் நமக்கு உதவி, நம் நாட்டை மீட்டுக் கொடுத்தவர்களுக்கு, நாம் அளித்த வாக்குறுதியை மறக்க முடியுமா?”

“மறக்க முடியாது. மறக்கவும் கூடாது! ஆனால், இந்த உலகில் கண்ணீரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/487&oldid=946717" இலிருந்து மீள்விக்கப்பட்டது