பக்கம்:நித்திலவல்லி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நித்திலவல்லி / முதல் பாகம்


அவிட்ட திருவிழா நாளில் நண்பகலுக்கு மேல் திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டிலிருந்து புறப்பட்ட சித்திர வண்டிகள் மூன்றும், சில நாழிகைப் பயணத்துக்குப் பின் வையை நதியின் வட கரையை அடைந்திருந்தன. நதிக் கரையை நெருங்கும் வரை ஓரளவு விரைவாகச் செல்ல முடிந்த அந்த வாகனங்கள், கோநகர்ச் சுற்றுப்புறங்களில் பெருகியிருந்த திருவிழாக் கூட்டம் காரணமாக அருகில் வந்ததும் நின்று போக வேண்டியிருந்தது. முன்னால் சென்ற வண்டியில் அதை ஒட்டிச் சென்றவனைத் தவிரப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் இருந்தனர். அடுத்த இரண்டு வண்டிகளிலும் பின்புறம் ஓலை வைத்துத் தடுத்துப் பூக்கள் கீழே விழுந்து விடாதபடி தாமரை மலர்கள் நிரப்பப்பட்டிருந்தன. ஆற்றுப்பாலத்தைக் கடந்து வண்டிகள் கரை ஏறியதும், அங்கே குதிரைகளில் அமர்ந்தபடி நகருக்குள் வரும் கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் வண்டிகளின் அருகே வந்தனர்.

முதல் வண்டியில் பெண்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருப்பதைக் கண்டு விட்டுச் சந்தேகம் தவிர்ந்த அந்த வீரர்கள் தாமரைப் பூக்கள் மட்டுமே குவிந்திருந்த மற்ற இரு வண்டிகளையும் சுற்றிச் சுற்றி வந்தனர். குதிரைகளில் அமர்ந்த படியே சுற்றி வந்ததால் வண்டிகளுக்குள் இருந்த தாமரைப் பூக்களைத் தங்கள் உயரத்திலிருந்து அவர்கள் மிக நன்றாகக் காண முடிந்தது. வண்டியை ஒட்டி வந்த இருவருமே, ‘இவை திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு வண்டிகள்’ ... என்பதை அந்த வீரர்களிடம் தெரிவித்தனர்.

வண்டிகளைச் செலுத்தி வந்தவர்கள் தக்க சமயத்தில் இவ்வாறு தெரிவித்தது பயனளித்தது என்றாலும் அந்த இரண்டு பூத பயங்கரப் படைவீரர்களில் ஒருவன் சிறிது கடுமையானவன் ஆகவும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறவன் ஆகவும் இருந்தான். மூன்று சித்திர வண்டிகளில் நடுவாக நின்ற வண்டியில் குவித்திருந்த தாமரை மலர்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/49&oldid=715194" இலிருந்து மீள்விக்கப்பட்டது