பக்கம்:நித்திலவல்லி.pdf/492

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. முடிவற்று நீளும் பயணம்

ளையநம்பியிடம் பேசித் தமக்கு வேண்டிய வாக்குறுதிகளை வாங்கிய பின்பு, கதறியழுகின்ற வேதனை உள்ளேயும், ஒரு மாபெரும் பேரரசை உருவாக்க வேண்டிய அரச தந்திரியின் பிடிவாதம் புறத்தேயும் தோன்ற வறண்ட கடமை உணர்வு ஒன்றே நோக்கமாகக் காராளரையும், அவர் மனைவியையும், மகளையும் அதே இடத்திற்குக் கூப்பிட்டனுப்பினார் மதுராபதி வித்தகர். அவர்கள் பணிவாக எதிரே வந்து வணங்கினார்கள். முதலில் நேரே சொல்ல வேண்டியதைச் சொல்லாமல், பெரியவர், காராளரின் பல்லாண்டுக் கால உதவிகளை ஒவ்வொன்றாக அவரிடமே நினைவு கூர்ந்து விவரித்துப் புகழ்ந்தார். திடீரென்று அவர் ஏன் தம்மிடம் அவ்வளவு மனம் நெகிழ்ந்து புகழ்கிறார் என்று காராளரே உள்ளுறத் திகைத்திருந்த போது, பெரியவர் மெல்லத் தம் நோக்கத்தைச் சொல்லத் தொடங்கினார்:

“பழம் பெருமை மிக்க இந்தப் பாண்டிய நாட்டுக்காகக் கடந்த பல ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவோ சுகபோகங்களையும், செல்வங்களையும் இழந்து தியாகம் செய்திருக்கிறீர்கள்! இன்றோ, அவற்றை எல்லாம் விடப் பெரியதும் அரியதும், ஒரு பெண் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாததுமான ஒன்றை விட்டுக் கொடுத்து உம்முடைய மகள் ஒரு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக நான் அவளிடமே கொற்றவை சாட்சியாக வாக்குறுதி பெற்றிருக்கிறேன். என்றாலும், ஒரு வாக்குறுதிக்காக இணங்குவது போல், கட்டுப்பட்டு அவள் அந்தத் தியாகத்தைச் செய்வதை விட, அவளே மனம் விரும்பிச் செய்யும் தியாகமாக அது அமைந்தால் நான் மகிழ்வேன்...” என்று தொடங்கித் தயக்கத்தோடு ஒவ்வொரு வார்த்தையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/492&oldid=946722" இலிருந்து மீள்விக்கப்பட்டது