பக்கம்:நித்திலவல்லி.pdf/493

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

495


கோர்த்துப் பேசுவது போல் வேண்டுகோளை மெல்ல வெளியிட்டார். செல்வப் பூங்கோதையிடம் நேரில் கூறத் தயங்கி, அவள் தந்தையிடம் பேசுவது போல் அவர் இவற்றைப் பேசியிருந்தாலும், அவளை எதிர் நோக்கியே சொற்கள் கூறப்பட்டிருந்தன.

அவர் எதிர்பார்த்தது போல், அவள் கண்ணீர் சிந்தி அழவில்லை. கதறவில்லை. சீறவில்லை. சாடவில்லை. ஒரு சிலையாகி நின்று விட்டாற் போல் ஆடாமல், அசையாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஏளனமும், சோகமும், வரட்சியும், விரக்தியும் அவள் விழிகளில் மாறி, மாறித் தோன்றுகிறாற் போல் அவர் பார்வையில் பட்டது. அவள் இன்னும் சாந்தமாகவே நின்று கொண்டிருந்தாள். நீண்ட நேரம் அப்படி நின்ற பின், அவரைப் பார்த்து விரக்தியோடு சிரித்தாள் அவள்.

“உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை செல்வப் பூங்கோதை?”

“ஒன்றுமில்லை ஐயா! ஏதோ நினைத்துக் கொண்டேன். சிரித்தேன். அதை நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால், உங்களைப் போன்ற மேதைகளுக்கு அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால், இதயம் உள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான். இந்த உலகில் உங்களைப் போன்றவர்கள், ஒவ்வொரு தலைமுறையிலும், யாராவது ஒரு பேதையின் அன்பைப் பலியிட்டு, அந்தப் பலிபீடத்தின் மேல் சிம்மாசனங்களின் உறுதிக்குக் கால்களை நடுகிறீர்கள்... செய்யுங்கள்... எத்தனை காலம் வேண்டுமானாலும் இப்படிச் செய்து பாருங்கள். உங்களால் மனித இதயங்களையும் அன்பையும் சேர விடாமற் செய்ய முடியலாம். ஆனால் அழித்து விட முடியாது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/493&oldid=946723" இலிருந்து மீள்விக்கப்பட்டது