பக்கம்:நித்திலவல்லி.pdf/496

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



“உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்களித்தபடி, நாட்டின் எதிர்கால நலனுக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக, இங்கு ஒரு பெண் மதுரையையே எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக நான் இன்று மதுரையை எரிக்க மாட்டேன். எரிக்கவும் கூடாது. இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும்.”

என்ற அவளுடைய சொற்களை நினைத்த போது, இவ்வளவு பெரிய அன்பைப் பிரித்து வைத்துத்தான் ஒரு பேரரசைக் காப்பாற்ற வேண்டுமா என்று அவர் மனமே நடுங்கியது. முன்பு திருமால் குன்றத்தில் மறைந்திருந்த போது, நினைத்துத் திட்டமிட்டபடி, தாம் எல்லா பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு, உடனே இப்போதே துறவியாக, வடதிசை நோக்கி இமயத்தையும், கங்கையையும் நாடிப் புறப்பட்டு விடலாமா என்று கூடத் தோன்றியது அவருக்கு. ‘பல்லாண்டு காலமாகப் பாடுபட்டு மீட்ட பாண்டிய நாட்டின் வளர்ச்சிக்கு, அருகிலிருந்து அறிவுரை கூறாமல், பெரியவர் இப்படி விலகிப் போகலாமா?’ என மக்கள் தம்மைப் பழி தூற்றுவார்களோ என்ற ஒரே பயத்தில்தான், அதைச் செய்யத் தயங்கினார் அவர். வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகிய பாண்டிய நாட்டை மீட்கும் பணியைச் செய்த உடன், அதை விட்டு விட்டு ஓடுவது கோழைத் தனமாகிவிடும் என்றும் தோன்றியது. அவரால் எல்லாவற்றையும் துறக்க முடிந்தது. தேசபக்தியைத் துறக்க முடியவில்லை. நாட்டுப் பற்றை விட முடியவில்லை. காராளர் போன்ற வேண்டியவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தும் கூட, நாட்டைக் காக்க விரும்பினார் அவர். தாம் நடந்து கொண்ட விதத்தினால், காராளர் மகள் செல்வப்பூங்கோதை அவருடைய கருங்கல் மனத்தையும் இளக்கிக் கலங்க வைத்திருந்தாள். அவளுக்காக உருகி வருந்தினார் அவர்.

“உங்களைப் போன்ற மேதைகளுக்கு வெறும் அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/496&oldid=946726" இலிருந்து மீள்விக்கப்பட்டது