பக்கம்:நித்திலவல்லி.pdf/498

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கவலைகள் இதயத்தை வாட்டிப் பிழிந்தாலும், சேர வேந்தனிடம் அளித்துள்ள வாக்குறுதியையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாதென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதிக நேரம் அவர் கவலைப்பட்டு ஒடுங்கிச் செயலிழந்து அமர்ந்திருக்க முடியவில்லை. பரிவாரங்களோடு கோநகருக்கு வந்து கொண்டிருக்கும் சேர வேந்தனை வரவேற்க அவர் ஆயத்தமாக வேண்டியிருந்தது. ஊரறிய உலகறிய வெளியிடவோ, பிறரிடம் பங்கிட்டுக் கொண்டு பேசிக் கவலை தவிர்க்கவோ முடியாத அந்தரங்கத் துயரங்களை மனத்திலேயே புதைத்துக் கொண்டு எழுந்து நடந்தார். அவர் சேரனை எதிர் கொண்டு வரவேற்கப் பரிவாரங்களுடனும், அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேருடனும், அரண்மனை முன்றிலில் இளையநம்பி முதலியவர்கள் ஏற்கனவே காத்திருப்பதாகவும், அவர்கள் அவரை எதிர்பார்ப்பதாகவும், அழகன் பெருமாள் வந்து அழைத்தான். அவரது முகத்தில் அமைதியின்மை தெரியா விட்டாலும், வாட்டம் இருப்பதை அழகன் பெருமாள் காணமுடிந்தது. பாண்டியப் பேரரசை மீண்டும் வென்று உருவாக்கிய மகா மேதையின் அந்தக் கணத்துக் கவலைகள் என்னவாக இருக்கும், எவ்வளவாக இருக்கும் என்பதை அவனாலும் அப்போது கணிக்க முடியவில்லை.

கோலாகலமான வரவேற்பிற்கிடையே சேரவேந்தன் தன் பரிவாரங்களோடும், பட்டத்தரசியோடும், பாண்டிய நாட்டின் பட்டத்தரசியாகச் சில தினங்களில் ஆகும் பேறு பெற்ற தன் மகளோடும் மதுரை மாநகருக்கு வந்து சேர்ந்தான். மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட யானை மேல் அமர்ந்து, வள்ளுவன் முடிசூட்டு விழாச் செய்தியையும், பாண்டியனுக்கும், சேரன் மகளுக்கும் மணமங்கலம் நிகழ இருக்கும் செய்தியையும் முரசறைந்து நகருக்கும், சுற்றுப்புறங்களுக்கும் அறிவித்துப் பரப்பினான். நகர் எங்கும் உண்டாட்டுகள் நிறைந்தன. நகர் எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/498&oldid=946728" இலிருந்து மீள்விக்கப்பட்டது