பக்கம்:நித்திலவல்லி.pdf/499

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

501


பெருஞ் சோற்றுப் படையல்கள் நிகழ்ந்தன. வீரர்களும், புலவர்களும், கலைஞர்களும், பாணர்களும், பாடினிகளும் அரண்மனைக் கொலு மண்டபத்திலிருந்து கூட்டம், கூட்டமாகப் பரிசில் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். மங்கல வாத்தியங்களின் இன்னிசை ஒலி நகரம் எங்கும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அரண்மனை அந்தப்புர மகளிருக்கு அலங்கரிக்கும் உரிமை பெற்ற இரத்தினமாலை, தான் கோர்த்து வைத்திருந்த முத்துமாலையால், இளையநம்பியின் பட்டத்தரசியாக வந்திருக்கும் சேரன் மகளை அலங்கரிக்கும் போது, தன் சொந்த உணர்வுகளை எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும், அவளுக்குக் கண் கலங்கியது. நெஞ்சில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. கூர்ந்து நோக்கினால் அவள் சேரன் மகளுக்கு அணிவித்துவிட்ட முத்து மாலையைத் தவிர, அவளுடைய கண்களிலும் ஒரு முத்துமாலை பிறந்து கொண்டிருந்தது தெரியும். எந்த முத்துமாலையைத் திருமோகூர்க் காராளர் மகள் செல்வப் பூங்கோதைக்கு அணிவிக்க வேண்டியிருக்கும் என்று அவள் எண்ணி எண்ணித் தொடுத்திருந்தாளோ, அதே முத்துமாலையினை இப்போது சேரன் மகளுக்கு அணிவிக்க நேர்ந்திருந்தது. முன்பு, தன் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்திய அவள், இப்போதெல்லாம் செல்வப்பூங்கோதைக்கு நேர்ந்து விட்ட பெருந் துயரத்துக்காகவும், அந்த நாட்டுப்புறத்துப் பேதைப் பெண்ணை எண்ணியும் கண்ணீர் சிந்தினாள். -

“முடிசூட்டு விழாவும், மணமங்கலமும் நிகழ்கிற வரை இருந்து செல்ல வேண்டும்” என்று பெரியவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கி, அரண்மனையில் தங்கியிருந்த காராளரும், அவர் மகளும், மனைவியும் தங்கள் மனவேதனை பிறருக்கு வெளிப்புட்டுத் தெரிந்து விடாமல், மிகவும் அடக்கமாகவும், எதுவுமே நடவாதது போலவும் இருக்க முயன்றனர். ஒரே ஒரு கணம் எப்படியாவது செல்வப் பூங்கோதையைக் கண்டு, தன் நிலைமையை விளக்கிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/499&oldid=946729" இலிருந்து மீள்விக்கப்பட்டது