பக்கம்:நித்திலவல்லி.pdf/500

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

502

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


எண்ணிய இளையநம்பிக்கு, அரண்மனையின் பரபரப்பிலும், முடிசூட்டு விழா ஆரவாரங்களிலும் அது இயலாமலே தட்டிப் போய்க் கொண்டிருந்தது.

அரண்மனையில் மங்கல நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தன. முடிசூட்டு விழாவுக்குப் பல்லவன் வரவில்லை என்றாலும், அவன் சார்பில் ஒர் அரச தூதர் வந்திருந்தார். முடிசூட்டுவிழா நேரத்தில், காராளர் உழவர் குடிக்கே உரிய கைராசியோடு முத்துகள் பதித்த திருமுடியை எடுத்து, அரசனுக்கு அணிவதற்காக அளித்தார். உடனே முடிசூட்டு விழாக் காலத்துத் தொன்று தொட்டு வரும் மரபாக முதுபெரு புலவர் ஒருவர் எழுந்து முன்பே இளையநம்பிக்கு அளிக்கப்பட்டிருந்த ‘இருள் தீர்த்த பாண்டியர்’ என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி அரசனை வாழ்த்தினார். உடனே முடி சூடிக் கொண்ட பாண்டியன் இளையநம்பியே எழுந்து, “என் குடிமக்களில் அனைவரினும் என்னுடைய பேரன்பின் இருப்பிடமான ஒருவர் முன்பே, எனக்குப் ‘பாண்டிய கடுங்கோன்’ என்று கோபமாகச் சிறப்புப் பெயர் சூட்டிவிட்டார். அப்படிப் பெயர் சூட்டிய அன்பு உள்ளம் இப்போது இந்தப் பேரவையிலேயே இருந்தாலும், உங்களிடம் யாரென்று கூற முடியாமல் இருக்கிறேன். என் மக்கள் இந்தக் கணத்திலிருந்து இனி எந்நாளும் என்னைப் ‘பாண்டியன் கடுங்கோன்-என்று அழைப்பார்களாயின், அந்தப் பெயரை எனக்குச் சூட்டியவரின் நினைவால் நான் அளவிலா மகிழ்ச்சி கொள்வேன்” என்று பல்லாயிரம் பேர்களிடையே வெளிப்படையாகப் பிரகடனம் செய்த போது, பெண்களின் கூட்டத்தோடு கூட்டமாக, நீறு பூத்த நெருப்பாய் நின்று கொண்டிருந்த செல்வப்பூங்கோதையின் அழகிய கண்களில் நீர் மல்கியது. யாரும் தன்னைக் கவனித்து விடாமல், தன்னுடைய கண்ணீரை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டாள் அவள். ஆனாலும் அந்தப் பெருங் கூட்டத்தில், இரண்டு கண்கள், அப்போதும் அவளைக் கவனிக்கத் தவறவில்லை. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/500&oldid=946730" இலிருந்து மீள்விக்கப்பட்டது