பக்கம்:நித்திலவல்லி.pdf/501

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

503



அவை, மதுராபதி வித்தகரின் கண்கள். தாங்கள் கூறிய ‘இருள் தீர்த்த பாண்டியன்’ என்னும் பொருள் பொதிந்த பெயரை விட்டு விட்டு, அரசன் தானே ஏன் கடுங்கோன் என்ற இங்கிதமில்லாத குரூரமான பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் என்பது அந்த அவையிலிருந்த புலவர்களுக்கு மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.

முடி சூட்டு விழா நிகழ்ந்த மறு நாள், அதிகாலையில் இருள் பிரியுமுன்பே வைகறையில் காராளர் குடும்பத்தினர் திருமோகூருக்குப் பயணமானார்கள். கொல்லனும் அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அந்த வேளையில் அரண்மனை முன்றிலில், பெரியவர் மதுராபதி வித்தகரும், திருக்கானப்பேர்க் கிழவர் பாண்டிய குல விழுப்பரையரும், அழகன் பெருமாளும் விடை கொடுத்து அவர்களை வழியனுப்பினர். கண்களில் நீர் சரிவதையும், உள்ளே இதயம் பொருமுவதையும் மறைத்தவளாய், இருளில் சித்திரம் அசைவது போல் நடந்து வந்து, பெரியவரை அவர் பாதங்களில் சிரந் தாழ்த்தி வணங்கினாள் செல்வப்பூங்கோதை. தம் பாதங்களில் வெம்மையாக அவள் கண்ணீர் நெகிழ்வதை உணர்ந்து, மனம் கலங்கினார், எதற்கும் கலங்காத அந்த மகா மேதை. நாத்தழுதழுக்க அவர் அவளிடம் கூறினார்:-

“என்னைப் பொறுத்துக்கொள் மகளே! என்மேல் தவறில்லை! நீ என்னிடம் திருமோகூரில் அன்று வாக்குறுதி அளித்துச் சத்தியம் செய்த போதே, 'சில சத்தியங்கள் செய்யும் போது பொதுவாக இருக்கலாம்: ஆனால் மீண்டும் நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும்', என்பதாக நான் கூறிய வார்த்தைகள் இன்றும் உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். உன் சத்தியமும் இன்று அப்படி மிகப் பெரியதாக நிரூபணமாகி விட்டது அம்மா.”

இதற்கு அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/501&oldid=946731" இலிருந்து மீள்விக்கப்பட்டது