பக்கம்:நித்திலவல்லி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நித்திலவல்லி / முதல் பாகம்


வேண்டும் என்று தவிக்காத ஆணே உலகத்தில் கிடையாது போலும் என்று தோன்றியது அவளுக்கு.

‘பெண் பிள்ளை புகழ்வதனால் சில வீரர்கள் கோழை ஆகிறார்கள்; சில கோழைகள் வீரர்களாகவும் செய்கிறார்கள்’ என்று தாயிடம் வம்பு பேசும்போது சில வேளைகளில் தன் தந்தை ஒரு வசனம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அந்த வசனத்தின் முதற்பகுதி இப்போது இங்கே விளைந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

“நியாயம்தான்! கோவிலுக்குக் கொண்டு போகும் பூக்களை வாளால் பரிசோதிப்பது நமக்கே பாவம்” என்று மற்றொரு பூதபயங்கரப் படை வீரனும் செல்வப் பூங்கோதையோடு ஒத்துப் பாடினான். ஏற்கனவே தன் வாளை அவள் புகழ்ந்து கூறிய சொற்களால் கடுமை குன்றி மயங்கியிருந்தவன் தன் நண்பனின் வார்த்தைகளால் மேலும் நம்பிக்கை வரப்பெற்றவனாக அந்த வண்டிகளைப் போகவிட்டு விட்டான். வடக்குக் கோட்டை வாயிலில் காவல் இருந்தாலும் சோதனைகளோ தடைகளோ எதுவும் இல்லை. தனித்தனியே சோதனைகள் எதுவும் செய்ய முடியாதபடி கூட்டமும் அதிகமாக இருந்தது. வண்டிகள் மூன்றையும் இருந்த வளமுடையார் கோவில் நந்தவனத்தில் கொண்டு போய் மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் நிறுத்தினார்கள் ஒட்டி வந்தவர்கள். அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்தது.


6. யானைப்பாகன் அந்துவன்

கோவிலுக்குள் அவிட்டநாள் பெருவிழாக் கூட்டம் வெள்ளமாகப் பொங்கி வழிந்தாலும் அந்த நந்தவனப் பகுதி, ஆட்கள் பழகாத காடுபோல் தனிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. வண்டிகள் அங்கே நிறுத்தப்பட்டன. செல்வப்பூங்கோதையும், அவள் தாயும் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/53&oldid=715211" இலிருந்து மீள்விக்கப்பட்டது