பக்கம்:நித்திலவல்லி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நித்திலவல்லி / முதல் பாகம்



வேறு எதுவும் நேர்ந்திருக்க இயலாது! கோட்டைக்குள் வந்து சேர இப்படி ஒர் அருமையான வழியைக் கூறுவதற்கு முதலில் உன் தந்தை ஏனோ தயங்கினார்?”

“பூப்போல் பத்திரமாக வந்து சேர்வது என்பார்கள். அப்படி அக நகருக்குள் வந்து சேர்ந்து விட்டீர்கள்! இனி உங்களை, நீங்களேதான் பொறுப்போடும், கவலையோடும், அக்கறையாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...”

“தலைவிதியா? காலக்கேடா? எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சொந்த நாட்டின் சொந்தத் தலைநகரத்திலேயே ஏதோ அந்நியன் கவலைப்படுவது போல் நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது” என்று நெட்டுயிர்த்த வண்ணம் அவளிடம் அவன் கூறிக்கொண்டிருந்த போது, கருடனைப் போல வளைந்த கிளிமூக்கும், காது வரை கிழிவது போல் சிரித்த வாயுமாக, ஒரு பருத்த மனிதன் அருகிலுள்ள செடிகளின் மறைவிலிருந்து வெளிப்பட்டு, இளைய நம்பியின் அருகே வந்தான். கிளி மூக்கும், கோணலாக நீண்ட இளித்த வாயும், பிறவியிலேயே அவனுக்கு அமைந்து விட்டவை என்று தெரிந்தது. அருகில் வந்து சுற்றும் முற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்த பின், இளையநம்பியை நோக்கிக் ‘கயல்’ என்று அவன் கூறிய ஒலி அடங்கு முன் இளையநம்பியும் அதே நல்லடையாளச் சொல்லைத் திருப்பிச் சொன்னான்.

“இவன் யானைப்பாகன் அந்துவன். இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களின் ஆட்சியைக் கண்டு வாய் கிழிய ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிய முதல் சிரிப்பை இன்னும் மாற்றிக் கொள்ள இவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை!” என்று செல்வப் பூங்கோதை, இளைய நம்பிக்கு அந்தப் புதிய மனிதனைப் பற்றிச் சொல்லிய போது,

“இது உன் கற்பனையா அல்லது அனுமானமா?” என்று சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் இளைய நம்பி.

“கற்பனை என்னுடையது இல்லை! அந்துவனையே கேளுங்களேன். அவன்தான் அடிக்கடி எல்லாரிடமும் இப்படிச் சொல்வான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/55&oldid=945242" இலிருந்து மீள்விக்கப்பட்டது