பக்கம்:நித்திலவல்லி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

61



கூடாதே என்ற கவலையில் பாலியில் ஏதோ பேசி, அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. பாலியில் இளைய நம்பி பேசத் தொடங்கியதும், அவன் மேலும் நின்று உடும்புப் பிடியாக அரற்றத் தொடங்கினான். போரிட்டோ, முரண்பட்டோ அவனை அங்கிருந்து விலக்கி அனுப்புவது, தனியே வந்து காத்திருக்கும் தனக்கு நல்லதில்லை என்று தயங்கியே, அந்தக் குடிகாரனின் பேச்சோடு ஒத்துப் பாடி அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. அப்போது அவனிருந்த தளர்ச்சியான நிலையில், தான் அவனைச் செம்மையாகப் புடைத்து வீழ்த்தக் கூட முடியும் என்றாலும், அவனைத் தேடி மற்றவர் வரவோ, அவனே எழுந்து போய் தன்னைச் சேர்ந்த மற்றவர்களைத் தேடி அங்கே அழைத்து வரவோ செய்தால், தன் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கையோடு முள்ளில் விழுந்த ஆடையை விலக்குவது போல் மெல்ல அவனை அங்கிருந்து விலக்க முயன்றான் இளையநம்பி.

அவனோ, தான் பாலியில் இயற்றியிருக்கும் சிருங்காரச் சுவைக் கவிதை ஒன்றை இவன் கேட்டே தீர வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாயிருந்த களப்பிரர்கள் தங்கள் நாட்டிலிருந்து படை வீரர்களாகவும், பல்வேறு பணியாளர்களாகவும், பல்லாயிரம் களப்பிர இளைஞர்களைக் கூடல் மாநகரில் கொண்டு வந்து வைத்து, அடிமைகளைப் போல் வேலை வாங்குவதால் மணமாகாத அந்த இளைஞர்கள் தவிப்பதையும், வேதனைப் படுவதையும், வேட்கையுற்றுத் திரிவதையும் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்தவற்றை நினைத்தான் இளையநம்பி. தான் கேள்விப்பட்டிருந்தவற்றில் எள்ளளவும் பொய்யில்லை என்பதை இப்பொழுது அவன் உணரமுடிந்தது.

வேறு வழியின்றி அந்தக் களிமகனின் பாலி மொழிக் கவிதையைக் கேட்டுத் தொலைப்பதற்காகக் கடம்பமரம் கண்ணில் படுகிற வகையில், அருகே இருந்த மண்டபப் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/62&oldid=945251" இலிருந்து மீள்விக்கப்பட்டது