பக்கம்:நித்திலவல்லி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

65


தொடக்கத்தில் அளவு கடந்த மெளனமாக இருந்து விட்டதற்காகவும் சேர்த்து இப்போது பேசுவது போல பேசினான் அந்தப் புதியவன். இளையநம்பி அவனுக்கு மிகச் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் மறுமொழி கூறினான். அந்த பாழ் மண்டபத்தை ஒட்டியிருந்த பகுதிகளில் மரங்களின் அடர்த்தி குறைவாக இருந்ததனால் அதிக இருள் இல்லை. அதனால் அந்தப் புதியவனை இளைய நம்பி ஓரளவு காணமுடிந்தது. முடி, உடை உடுத்தியிருந்த முறை, மீசை எல்லாவற்றாலும் ஒரு களப்பிரனைப்போல் தோன்றினான் அவன். அதைக் கண்டு இளைய நம்பி அவனைக் கேட்டான்;

“களப்பிரர்கள் ஆட்சியில் கள்ளும் காமமும் கொள்ளையாய் மலிந்திருப்பதை இந்த வெள்ளியம்பலத்தில் நுழைந்ததுமே கண்டேன். வருந்தினேன். இப்போது என் எதிரே தெரிகிற தோற்றத்திலிருந்தே, கள்ளும் காமமும் மலிந்திருக்கும் அதே வேளையில், தமிழ் நடை உடை நாகரிகங்கள் எல்லாம் நலிந்திருப்பதையும் காண முடிகிறது.”

“கொலை வெறியர்களாகிய களப்பிரர்களின் நடுவே ஊடாடி நம் காரியங்களைச்சாதித்துக் கொள்ள இப்படி நமக்கே விருப்பமில்லாத பொய்க்கோலங்களை நாம் ஏற்கவும் வேண்டியிருக்கிறது ஐயா...”

“விந்தைதான்! பொய்க்கு வேண்டிய கோலம் மெய்க்கும் வேண்டியதாக இருக்கிறது என்று நீ கூறுகிறாய் போலிருக்கிறது.”

“ஆம், ஐயா! பொய்யை யாரும் அலங்கரிக்கத் தொடங்காதவரை- மெய்க்கு அது மெய்யாயிருப்பதையே கோலமாகக் கொண்டு நாம் மன நிறைவு அடையலாம். ஆனால் பொய்யை அலங்கரிக்கத் தொடங்கிவிட்ட உலகில் மெய்யையும் நாம் அலங்கரிக்காமல் விட முடிவதில்லை.”

“நீ கூறுவது பிழை! எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங் கரிக்கிறார்கள். ஆனால், சத்தியம் நெருப்பைப் போன்றது.

நி.வ - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/66&oldid=715224" இலிருந்து மீள்விக்கப்பட்டது