பக்கம்:நித்திலவல்லி.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

67



பகலிலும் இருள்தான் நிரம்பியிருக்கிறது. சில ஆட்சிகள், இருளையும் ஒளி பெறச் செய்யும். வேறு சில ஆட்சிகளோ, பகலையும் கூட இருளடையச் செய்துவிடும். அப்படி ஒரு கொடுங்கோலாட்சியில்தான் இன்று நீயும் நானும் இருக்கிறோம். ஆனால் எங்கே போகிறோம், எதைத் தெரிந்துகொள்ளப் போகிறோம் என்பதை முதலில் எனக்குச் சொல். நான் அறிய வேண்டிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் உன்னிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என்பதாக இருந்த வளமுடையார் கோவில் யானைப்பாகன் அந்துவன் என்னிடம் கூறி அனுப்பினான். அவற்றைப் பற்றி என்ன சொல்கிறாய் நீ?”

“அந்துவன் கூறி அனுப்பியவற்றில் பிழை ஒன்றும் இல்லை ஐயா! அவன் அடியேனைப் பற்றித் தங்களிடம் யாவும் கூறியிருக்கிறானோ, இல்லையோ தெரியாது. அடியேன் வையை நதிக்கரையில் திருமருத முன் துறையில் உள்ள உப வனக் காப்பாளன், அழகன் பெருமாள் மாறன். பெரியவர் மதுராபதி வித்தகரை அடியேனுடைய குல தெய்வத்தினும் மேலாக மதித்துத் தொழுகிறவன். நம்முடைய எல்லாக் காரியங்களும், கோநகரில் நடைபெற இரண்டே இரண்டு வழிகள் தான் இன்னும் அடைபடாமல் எஞ்சியுள்ளன. அதில் ஒன்று, என்னுடைய உப வனத்தில் இருக்கிறது. மற்றொன்று இங்கே இந்த வெள்ளியம்பல மண்டபத்தில் இருக்கிறது.”

“எந்த வழிகளைச் சொல்கிறாய் நீ?”

“இதோ, இந்த வழியைத்தான் சொல்கிறேன்” என்று கூறியவாறே கீழே குனிந்து, அந்த மண்டபத்தின் கல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் புரட்டினான் அழகன் பெருமாள். இளைய நம்பியின் கண்கள், அவன் புரட்டிய கல் விட்ட வழியில் ஆள் இறங்கும் இடைவெளிக்குக் கீழே மங்கலாகப் படிகள் தென்படுவதைக் கவனித்தன.

“ஒரு காலத்தில் மங்கல நன்னாட்களில் அரண்மனைப் பெண்கள் இந்தச் சுரங்க வழியாகத் திருமருத முன்துறைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/68&oldid=945253" இலிருந்து மீள்விக்கப்பட்டது