பக்கம்:நித்திலவல்லி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

73



இளையநம்பிக்காகத் தெய்வங்களை எல்லாம் வேண்டித் தவித்தது. அதற்கேற்றார் போல் வெள்ளியம்பலப் பகுதியின் முடிவில், ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு பூதபயங்கரப் படைவீரர்கள் யாரையோ சிறைப் பிடித்துச் செல்லும் காட்சி ஒன்று அவள் கண்களில் பட்டு விட்டது. உடனே அவள் மனத்தில் என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் எல்லாம் எழுந்து வாட்டின. அந்த இடத்திலிருந்து மேலே போகவே அவளுக்கு மனம் இல்லை. வண்டியை நிறுத்திக் களப்பிரர்கள் அப்போது சிறைப் பிடித்துச் செல்வது யாரை என்று அறிந்து கொண்ட பின்பே மேலே செல்ல விரும்பினாள் அவள். தானே இறங்கி, ஓடிப் போய்ப் பார்த்து ஐயம் தெளிய வேண்டும் என்று துடித்தாள் அவள். அவளுடைய வேதனையை உணர்ந்து அதற்குச் செவி சாய்த்து, வண்டியை ஒட்டுகிறவன் இறங்கிப் போய்ப் பார்த்து விட்டு வந்து-

“ஒற்றன் என்று சந்தேகப்பட்டு யாரோ ஒருவனைச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்துப் போகிறார்கள்"- என்று தெரிவித்தான். அவள் மனம் விரைந்து துடித்தது. பயந்து கதறும் குரலில், “அவர்கள் யாரை இழுத்துப் போகிறார்களோ, அந்த மனிதரை நீ நன்றாகப் பார்த்தாயா?” -என்று அவனை மீண்டும் வினாவினாள் அவள். “பார்க்க முடியவில்லை” என்று மறுமொழி கூறியபோது அவள் நெட்டுயிர்த்தாள். செல்வப் பூங்கோதையின் அன்னை, அவள் தவிப்பைக் கண்டு நகைத்தாள்.

“பெண்ணே! நமக்கு வேண்டியவர்களைக் கோழைகளாவும், பலவீனமானவர்களாகவும் கற்பனை செய்கிற அளவிற்கு நாம் தைரியமற்றவர்கள் ஆகிவிடக் கூடாது. உன் தவிப்பு வீணானது. பெரியவர் மதுராபதி வித்தகரின் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் யாராயினும் அவர்களை இவ்வளவு எளிதாக எதிரிகள் பிடித்துவிட முடியாது என்ற நம்பிக்கையாவது உனக்கு இருக்க வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/74&oldid=945258" இலிருந்து மீள்விக்கப்பட்டது