பக்கம்:நித்திலவல்லி.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நித்திலவல்லி / முதல் பாகம்



அருளைப் புரிந்திருக்கப் போகிறது இதற்கு?’ -என்று விளையாட்டாகச் சிந்திப்பதுண்டு. தன்னுடைய வியப்புகள், அதிசயங்கள், சுகதுக்கங்கள் ஆகியவற்றைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அவள் முயன்று காண்பித்துக் கொள்ள விரும்புவதில்லை. எப்போதாவது அவரிடம் பேசும் போது அப்படி வியப்புகளோ, அதிசயங்களோ, சுக துக்கங்களோ தழுவிப் பிறக்கும் தன்னுடைய வார்த்தைகள், கருங்கல்லில் உதிரும் முல்லை மலர்களைப் போன்றே, அவரிடம் சென்று சேருவதாக அவளுக்குத் தோன்றும். அந்தக் கருங்கல்லில் எல்லையற்ற ஆற்றலும், தெய்வீகமும் இருப்பதாக அவளுள் பழகியிருந்த ஒரு பயபக்தியின் காரணமாக அதை அவள் ஒரு குறையாக எண்ணுவதில்லை. என்றாலும் அவரிடம் பேசும் ஒவ்வொரு முறையும், அந்த யானை மலைக் கருங்கல்லில் உதிரும் முல்லைப் பூக்களின் காட்சி அவளுக்கு நினைவு வராமற் போவதில்லை. இதயத்தின் ஒரு கோடியில் அந்தப் பெரியவருக்குப் பேர்த்தி வயதுகூட நிரம்பியிராத தன் மேல் அவருள்ளே ஒரு பாசமும், குழைவும், ஆசியும் இருக்கும் என்று அவள் நம்பினாலும், அந்தப் பாசத்தையும், ஆசியையும் சொற்களால் வெளிப்படுத்தி அங்கீகரிக்காத அவருடைய உணர்ச்சிகளின் இறுகிய தன்மையை அவள் பலமுறை நேருக்கு நேர் கண்டு மருண்டதுண்டு.

இன்று இந்த நள்ளிரவிலும் அப்படியே நேர்ந்தது. தன்னருகே அன்னையையும், எதிரே நிற்கும் பெரியவரின் அருகே தந்தையையும் வைத்துக் கொண்டு, தான் கூற வேண்டியவற்றுக்கான இங்கிதமான சொற்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் புதிதாக மாலை தொடுத்துப் பழகுவது போல் சொற்களை ஒவ்வொன்றாகத் தொடுத்துப் பேசினாள் அவள். இளையநம்பியின் கையும் வண்டியில் குவித்திருந்த தாமரைப் பூக்களும் வேறுபாடு தெரியாமல் ஒன்றாயிருந்த இடத்தைப் பற்றிக் கூறும் போது, அவளையும் மீறிச் சொற்கள் மிக மிக நளினமாய்க் கோர்த்துக் கொண்டு வந்தன. தானும் தன்னுடைய அன்னையும், வெள்ளியம்பலப் பகுதியைக் கடந்து நடுவூர் பழியே திருவாலவாய்க்குச் செல்லும் போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/79&oldid=945359" இலிருந்து மீள்விக்கப்பட்டது