பக்கம்:நித்திலவல்லி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

83



“இதில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை. மனத்தில் தோன்றிய ஐயத்தைத் தெளிவு செய்து கொள்ளவே உன்னைக் கேட்டேன்.”

“மழைக் காலங்களிலும், வையையில் வெள்ளப் பெருக்குக் காலங்களிலும் இந்த நிலவறையில் பெரும் பகுதி முழங்கால் அளவு தண்ணீர் கூட நிரம்பி விடுவது உண்டு, ஐயா...” பேசிக் கொண்டே இளையநம்பியை அழைத்துச் சென்ற அழகன்பெருமாள் ஓரிடம் வந்ததும் நின்று கூறினான்.

“ஐயா! இப்போது நீங்கள் நிற்கிற இடத்திற்கு வலதுபுறம் உங்கள் வலது தோளின் திசையில் வலப் பக்கமாக நடந்து நூறு பாக தூரம் சென்றால் நான் முன்பே கூறினேனே அந்தக் கணிகையர் வீதி வாயில் வரும்...”

“எதுவுமே தெரியாத இந்தக் கொடுமையான இருளில், அந்த வழியை இவ்வளவு குறிப்பாக இலக்குத் தப்பாமல், நீ எப்படிக் கூற முடிகிறது என்பதுதான் எனக்கு வியப்பாயிருக்கிறது!”

‘அது மிகவும் எளிது ஐயா! இந்த இடத்தில் கீழே கல்தளம் பரவியிருக்கிறது. அந்தத் தளத்தில் நடுவில் சிறிதாக மூன்று குழிகள் இருக்கின்றன. நடந்து வருகிற யாரும் அந்தக் குழிகளின் மேல் கால்கள் பாவாமல் நடக்க முடியாது. அதை வைத்து வழியை அநுமானம் செய்ய முடியும். இப்போது நீங்களே இன்னும் ஓர் அடிபெயர்த்து வைத்து முன் நடந்தால் அதை உணர்வீர்கள்.”

உடனே ஓர் அடி முன்னால் நடந்த இளையநம்பி, அழகன்பெருமாள் கூறியது போலவே பாதங்களில் கற்குழிகள் தென்படுவதைத் தெளிவாக உணர முடிந்தது. தனக்குத் தோன்றிய இன்னொரு சந்தேகத்தையும் அவன் அழகன் பெருமாளிடம் அப்போதே கேட்டான்.

“உப வனத்து முனையிலிருந்தும் வெள்ளியம்பல முனையிலிருந்தும் ஏற்படாத அபாயமோ, இடையூறோ இந்தக் கணிகையர் வீதி முனையிலிருந்து நமக்கு ஏற்படாது என்பது என்ன உறுதி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/84&oldid=945364" இலிருந்து மீள்விக்கப்பட்டது