பக்கம்:நித்திலவல்லி.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

89



குயில்களும் கூவிக் கொண்டிருந்தன. தோட்டப் பரப்பில் இடையிடையே இருந்த சிறு சிறு வாவிகளிலும், பொய்கைகளிலும் வட்ட வட்ட இலைகளின் நடுவே வெண்மையும், சிவப்புமாகப் பனி புலராத பூக்கள் சிலிர்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தன. அந்த உல்லாச மனநிலையில், உடன் வந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் மாறனை மீண்டும் வம்புக்கு இழுத்து, அவன் வாயைக் கிளறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது இளையநம்பிக்கு. அவனுக்கும் தனக்கும் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்த உரையாடலையே மீண்டும் இரு பொருள்பட, இரட்டுற மொழிதலாகக் கேட்டான்.

“மான்களையும், மயில்களையும், கிளிகளையும், குயில்களையும் இந்தச் சோலையில் நிறையக் காண முடிகிறது.”

“அவற்றைப் பேணி வளர்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம் உண்டு ஐயா! அவை யாருக்கும் துயரம் புரியாதவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லாரையும் மகிழ்விப்பவை”

“நான் இங்குள்ள மான்களையும், மயில்களையும் பற்றி மட்டும்தான் குறிப்பிடுகிறேன். நிலவறை வழியின் மூன்று குழிப் பாதையாகச் சென்றால், சந்திக்க முடிந்த மான்களையும், மயில்களையும் அல்ல.”

“உரை நடையில் கூடத் திருக்கானப்பேரில் ஆகுபெயராகவும், அன்மொழித் தொகையாகவும் கடுநடையிற் பேசுவார்கள் போலிருக்கிறது. திருக்கானப்பேர்த் தமிழ் நடை மட்டுமின்றி மனிதர்களும் கூடச் சிறிது கடுமையாகத்தான் இருக்கிறார்கள்...”

“இந்த அனுமானம் எதிலிருந்து உனக்குக் கிடைத்தது அழகன் பெருமாள்?”

“எல்லா அனுமானங்களுக்குமே பிரமாணங்களைக் கேட்பதிலிருந்தே திருக்கானப்பேர் மனிதர்களின் மன இறுக்கம் தெரியவில்லையா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/90&oldid=945353" இலிருந்து மீள்விக்கப்பட்டது