பக்கம்:நித்திலவல்லி.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

91



திருமோகூர்ப் பெரிய காராளர், யானைப்பாகன் அந்துவன், இப்போது இந்த வையைக் கரை உப வனத்து அழகன் பெருமாள் எல்லாருமே அப்படி இருப்பதைப் பெரியவரின் கை வண்ணச் சிறப்பாகக் கருதி மதித்தான் அவன்.

உப வனத்தின் உள்ளே நடந்து சென்ற அவர்கள், வனத்தின் அடர்ந்த பகுதி ஒன்றில், பின்புறம் வையையில் இறங்குவதற்குப் படிக்கட்டு இருக்குமளவிற்கு நதியை ஒட்டி வாயிற்புறம் தெற்கு திசையைப் பார்த்தும், புறங்கடை வடக்கே வையை நதியை நோக்கியும் அமைந்திருந்த ஒரு மண்டபத்திற்கு முன்பாக வந்திருந்தனர். களப்பிரார்கள் போன்றே நடையுடை பாவனைகளும் தலை முடியும் வைத்திருந்த ஐவர் முரட்டு மல்லர்களைப் போன்ற தோற்றத்தோடு அங்கே இருந்தனர்.

அழகன் பெருமாள் இளையநம்பியை அந்த மண்டபத்தின் முன்புறத் தாழ்வாரத்தில் கொண்டு போய் நிறுத்திய போது, அங்கிருந்த ஐவருமே ஐந்து விதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்த காரியம், தத்தம் குணச்சித்திரத்தின் ஓர் அடையாளமாய் இருக்குமோ என்றுகூட இளையநம்பி எண்ணினான். பொதுவாக, எல்லாருமே ஒரு விநாடி புதிய மனிதர் ஒருவரோடு அழகன் பெருமாள் உள்ளே நுழைந்த போது, தாம் தாம் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனம் கலைந்து, வந்தவர்கள் பக்கமாகத் திரும்பினர். நிமிர்ந்து பார்த்தனர் ஐவரும்.

அரும்பு மீசையும் மலர்ந்த கண்களும் சிவந்த இதழ்களுமாக ஓரளவு எடுப்பான முகத்துடனிருந்த ஒருவன் யாழைக் கையில் வைத்து, அறுந்திருந்த நரம்புகளைச் செம்மை செய்வதற்காகப் புதிய நரம்பு பின்னிக் கொண்டிருந்தான்.

சிவந்து உருண்ட கண்களும், முகத்திலும், தோள்களிலும் நன்றாகத் தெரியும் பல வெட்டுக்காயத் தழும்புகளும் உடைய ஒருவன், மின்னலாக ஒளிரும் புதிய வாளின் நுனியை அடித்துக் கூர்மைப் படுத்திக் கொண்டிருந்தான். கட்டை குட்டையான ஒருவன் செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/92&oldid=945355" இலிருந்து மீள்விக்கப்பட்டது