பக்கம்:நித்திலவல்லி.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

நித்திலவல்லி / முதல் பாகம்



நீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து, புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான்.

‘சேரர் நாகரிகத்தைப் பேரியாறும்[1], சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே! உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன்.

நீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருக வினைஞர்[2] நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய, திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக் கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும், நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின், அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய் விட்டனர்.

அழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளைய நம்பி.

“போகலாம்! அதைத் தெரிந்து கொள்ளவே, இப்போது நாம் புறப்படுகிறோம்” என்று கூறித் தோளில் பூக்குடலையோடும், கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள்.


  1. இன்று பெரியாறு
  2. நெசவாளிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/99&oldid=945262" இலிருந்து மீள்விக்கப்பட்டது