பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நினைவு அலைகள் ஏசுவின் வேண்டுதலை வாயும் முணுமுணுக்கும். வெகுண்டு, பழி வாங்கும் பாதையில் காலெடுத்து வைக்காமல், என்னைக் காத்து வந்துள்ளேன். மாலை முழுதும் விளையாட்டு நான் படித்த யூ.எப்.சி.எம். உயர்நிலைப் பள்ளியைப் பற்றி எனக்குத் குறையே இல்லையா? உண்டு. குறையில்லாத அமைப்பு ஏது? குறைபட்டுக் கொள்ளாத மனிதன் எவன்? என்னுடைய உயர்நிலைப் பள்ளிக்குப் போதுமான விளையாட்டுத் திடல் கிடையாது. எனவே, விளையாட்டுகளில் எல்லோரும் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு இல்லை. உடற்பயிற்சிக்கு மட்டும் போதுமான இடம் இருந்தது. எல்லோரும் நன்முறையில், தவறாமல், உடற்பயிற்சி பெற்றோம். நானும் அந்த நன்மையைப் பெற்றேன். பிற உடற்பயிற்சி, விளையாட்டிற்கு ஈடாக மெய்மறந்த விளை யாட்டுகளால் விளையும் மகிழ்ச்சியே தனியானவை. உலகத்தை மறந்து, சூழ்நிலையைச் சிந்தியாமல், சிறிய பெரிய பந்தொன்றையே கண்ணிலும் கருத்திலும் கொண்டு, அதையே உதைத்து, அல்லது அடித்துத் தள்ளுவதில் ஈடுபடுதல் வெறும் பொழுதுபோக்கல்ல; நல்ல பயிற்சி; பின்னர் வாழவேண்டிய வாழ்க்கைக்கு உதவும் பயிற்சி. பெரியது ஒன்றிலே ஈடுபட்டு, முனைந்து நிற்கும்போது, மற்றவர்களை, சூழ்ந்திருப்பவற்றை - எவ்வளவு கவர்ச்சியுடையன வாயினும், சிந்தையிற் கொள்ளாத பக்குவத்தை, பந்தய விளையாட்டுகள் ஊட்டுகின்றன. இளமையிற் பெறும் அம் மனப்போக்கு நெடுநாள் துணைநிற்கும். எங்கோ இருக்கிற பந்தை என்ன விரைவில், எதுவரை தள்ளி, யாரிடம் ஒப்புவித்தால் வெற்றி பெறலாம் என்னும் நுட்பமறிந்து ஆடுவதல்லவா.அரிய விளையாட்டுக் கலை? அந்தக் கலைநுட்பத்தை மறந்து தன் முன்னே, நெளிந்து குழைந்து நிற்பதனாலேயே, பகைவரிடம் பந்தை ஒப்புவித்தால் பெற்றதை இழக்க நேரிடும். தோல்வியைத் தழுவ நேரிடும். விளையாட்டிற்குப் பிறகு அமைதியாக இருந்து ஆழ்ந்து சிந்திப் போர்க்கு இந்த உண்மை புலனாகும். ஒரே வேளை அறியாமல் எதிராளியிடம் ஒப்படைத்து விட்டாலும் அடுத்த ஆட்டங்களில் அத் தவற்றினை விழிப்பாகத் தவிர்ப்பார்கள். விளையாட்டுகள் மனத்திற்கு மகிழ்ச்சியும் உடலுக்கு உரமும் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/100&oldid=786840" இலிருந்து மீள்விக்கப்பட்டது