பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 79 'சாதி முறை மாறினால் என்ன குடி முழுகிப் போகும், 'ஏன் இதைப் பற்றி நம் பெரியவர்கள் நினைக்கவில்லை, நினைத்து, முயன்று கைவிட்டு விட்டார்களா? இப்படிச் சுற்றி வந்தது என் சிந்தனை. பாலசுப்பிரமணியர், குதிரை வாகனத்தில் வந்தார். எங்கள் தெருவில் வீட்டுக்கு வீடு தீபாராதனை நடந்தது. எங்கள் மாமாவின் வீட்டில் சுவாமிக்குப் பட்டுசார்த்துவார்கள். ஆகவே, பல மணித்துளிகள் அங்கே தங்க நேரிடும். நான்கு பக்கங் களிலும் முட்டுக் கால்கள் கொடுத்து, வாகனத்தை மாமா வீட்டு வாசலில் நிறுத்தி வைப்பார்கள். வீட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் உற்சவமூர்த்திக்கு அருகில் சென்று, முன்னே நின்று கும்பிடுவது வழக்கம். எல்லோரும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்ட பிறகே, அங்கிருந்து சுவாமி புறப்படும். வழக்கம்போல, அவ்வாண்டும் மாமாவின் வீட்டண்டை நின்றது. பட்டு சார்த்துமுறை நடந்தது. ஆண்கள், அருகில் சென்றார்கள்; வணங்கினார்கள்; திருநீற்றைப் பெற்றுப் பக்தியோடு அணிந்து கொண்டார்கள். பின்னர்ப் பெண்மணிகள், ஒருவர் பின் ஒருவராகச் சென்றார்கள். அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நானும் தண்டுகளுக்கிடையில் நுழைந்தேன். முன்னே பக்கத்துக்கு அறுவர் பின்னே பக்கத்துக்கு அறுவர் ஆக இருபத்து நான்கு பேர்கள், பாலசுப்ரமணியரைத்துக்கி வந்தார்கள். வாகனத்தின்மேல் மூர்த்தி இருக்க, பக்கத்தில் இரு குருக்கள் குடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். தீபாராதனை செய்ய இருவர் உட்கார்ந்து வந்தனர். வாகனத்தைத் தூக்கி வந்தவர்களைக் கவனித்துக்கொண்டே நடந்தேன். அவர்களுக்குப் பெயர் பணி செய்வோர். அவர்கள் தனிச் சாதியாம். அவர்களுடைய தோள்கள் காய்த்துத் தழும்பேறியிருந்தன. 'ஐயோ பாவம் எவ்வளவு சுமை! எப்படி வலிக்கும் என்று எண்ணினேன். அந்த ஏக்கத்தில் நடுவே நடக்காமல், பணி செய்வார் ஒருவர்மேல் பட்டு விடுவேனோ என்று அஞ்சும் அளவிற்கு ஒரு பக்கம் ஒதுங்கினேன். வாகனம் தூக்கிகளில் ஒருவர், 'நகர்ந்துக்குங்கோ சின்ன முதலியார்மேல் பட்டுடாதிங்க என்று 'சிற்றப் பணி செய்வோர்களைப் பார்த்து எச்சரித்தது காதில் வீழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/121&oldid=786863" இலிருந்து மீள்விக்கப்பட்டது